பாலக்காடு:கேரள மாநிலம், சொர்ணுார் அருகே இரு தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில், பயணியர் 40 பேர் காயமடைந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சொர்ணுார் கூனத்தறை அருகே ஒட்டப்பாலத்தில் இருந்து திருச்சூர் நோக்கிச் சென்ற தனியார் பஸ்சும்; குருவாயூரில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
காயமடைந்தவர்களை அப்பகுதி மக்களும், தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ், -தீயணைப்பு படையினரும் மீட்டு, வாணியங்குளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்தில், 4 குழந்தைகள், 20 பெண்கள் உட்பட, இரு பஸ்களில் பயணித்த 40க்கும் பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த டிரைவர்களில் ஒருவரான ராஜேஷ், 38, என்பவர் ஆபத்தான நிலையில், திருச்சூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொர்ணுார் எம்.எல்.ஏ., மம்மிக்குட்டி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
விபத்தில் இரு பஸ்களின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்துள்ளன. இரு பஸ்களின் அதிவேகம் தான் விபத்துக்கு காரணமாகும்.
விபத்தால், பாலக்காடு – -குளப்புள்ளி பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சொர்ணுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement