கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும் வழியில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயரிழந்தார். இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற 3 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். இவர்கள் மூவரும் இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் எனவும் சோப்ரா வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும் வழியில் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மூவரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வன்முறை குறித்து மாநில தேர்தல் ஆணையர் ராஜீவாசின்ஹா, பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக தங்களுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று அவர் கூறினார்.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் முகம்மது சலீம் குற்றம் சாட்டியுள்ளார்.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாங்கர் மற்றும் பிர்பும் மாவட்டத்தில் சைத்தியாவிலும் நேற்று வேட்புமனு தாக்கல் தொடர்பாக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 48 மணி நேரத்துக்குள் மத்திய படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.