இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் தீவைத்தது.
மணிப்பூரில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 3-ம் தேதி முதல் ஒருமாதத்துக்கும் மேலாக அம்மாநிலத்தில் வன்முறை, கலவரம் நீடிக்கிறது. இதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினமும் தலைநகர் இம்பால் போர்க்களமாக மாறியது. நியூ செக்கான் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அதிரடிப்படை வீரர்களும் பொதுமக்களும் காயமடைந்த நிலையில், 3 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது.
இதையடுத்து இரவு 11 மணிக்கு இம்பாலின் கோங்பா பகுதியில் உள்ள மத்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “பாதுகாப்பு படையினரை மீறி ஒரு கும்பல் அமைச்சர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது. வீட்டினுள் பெட்ரோல் குண்டுகளை வீசியது. பிறகு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அக்கும்பல் கலைக்கப்பட்டது” என்றனர்.
இச்சம்பவம் நடந்தபோது மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் கேரளாவில் இருந்தார். இது மனிதாபிமானமற்ற செயல் என்று கூறியுள்ள அமைச்சர், மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது சொந்த மாநிலத்தில் நடைபெறும் சம்பவங்கள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என இப்போதும் கேட்டுக்கொள்கிறேன். விஷமிகள் பெட்ரோல் குண்டுகளை எடுத்துச் சென்று வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதில் எனது வீட்டின் தரை தளமும் முதல் தளமும் சேதம் அடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை” என்றார்.
இச்சம்பவத்திற்கு முந்தைய நாள் இம்பாலில் உள்ள பெண் அமைச்சர் நெம்சா கிப்ஜென்னின் அரசு வீட்டுக்கு விஷமிகள் தீவைத்தனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.