மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டை ரூ.1.27 கோடிக்கு விற்று அதை சைபர் மோசடி கும்பலிடம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த 53 வயது நபர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தனது வீட்டை ரூ.1.27 கோடிக்கு விற்பனை செய்தார். அந்தப் பணத்தில் புதிய வீடு வாங்கலாம் என திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு டெலிகிராம் செயலியில் பகுதி நேர வேலை பற்றி ஒரு தகவல் வந்தது. அதை அனுப்பிய பெண், திரைப்படங்கள் மற்றும் ஓட்டல்களின் சில இணைய இணைப்புகளை அனுப்புவதாகவும், அதற்கு அவர் அதிக மதிப்பீடு வழங்கி அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அந்தப் பெண்ணுக்கு அனுப்பினால், அதற்கேற்ற பணம் அனுப்பப்படும் என கூறியுள்ளார்.
அதேபோல் மும்பையை சேர்ந்தவர், இணைய இணைப்புகளை மதிப்பீடு செய்து அனுப்பியுள்ளார். அதற்காக அவருக்கு ரூ.7,000 பணம் அனுப்பப்பட்டுள்ளது. பணம்எளிதாக கிடைத்ததால் மும்பை ஆசாமி மகிழ்ச்சியடைந்து, இணைய இணைப்புகளை மதிப்பீடு செய்யும் வேலையில் அதிக ஆர்வம் காட்டினார். இணைய இணைப்புகளை அனுப்பிய பெண், மும்பை ஆசாமியிடம் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பெற்றுள்ளார்.
மும்பைச் சேர்ந்தவருக்கு இ-வேலட் ஒன்றை உருவாக்கி அதற்கான பாஸ்வேர்டு விவரத்தை அந்தப் பெண் அளித்துள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் இணையதளங்களை மதிப்பீடு செய்ததற்கான தொகை இ-வேலட்டில் போடப்பட்டுள்ளன. முதலில் அவரது கணக்கில் ரூ.17, 372 போடப்பட்டது.
அடுத்த முறை இணைய இணைப்புகளை அனுப்பிய பெண், அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ.32,000 டெபாசிட் செய்யும்படி மும்பை ஆசாமியிடம் கூறியுள்ளார். அதன்பின் அவரது இ-வேலட் இருப்பை பரிசோதிக்கும்படி மும்பை ஆசாமியிடம் சைபர் மோசடி பெண் கூறியுள்ளார். அப்போது அதில் ரூ.55,000 இருந்தது. இதையடுத்து அந்தப் பெண் கூறிய வங்கி கணக்கில் ரூ.50,000 டெபாசிட் செய்துள்ளார். இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்டதால், அவர் ரூ.55,000 மீண்டும் அனுப்பினார்.
கடந்த மே 17-ம் தேதி அன்று, மோசடி பெண் கூறிய வங்கி கணக்குகளில், மும்பை ஆசாமி ரூ.48 லட்சம் செலுத்தி, அந்த பெண் அனுப்பிய இணைய இணைப்பு பணிகளை எல்லாம் முடித்துக் கொடுத்துள்ளார். அவரது இ-வேலட்டில் லாபம் ரூ.60 லட்சம் என காட்டியது. இந்தப் பணம் அவரது வங்கி கணக்குக்கு செல்ல வேண்டும் என்றால், அவர் கூடுதலாக ரூ.30 லட்சத்தை செலுத்த வேண்டும் என மோசடி பெண் கூறியுள்ளார். கடந்த மே 18-ம் தேதி மும்பை ஆசாமி ரூ.76 லட்சத்தை, மோசடி பெண் கூறிய வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளார்.
ஆனால், அவர் செய்த முதலீடுகளுக்கான பலன் எதுவும், அவரது வங்கி கணக்குக்கு திரும்பி வரவில்லை. இது குறித்து மோசடி பெண்ணிடம் மும்பை ஆசாமி கேட்டபோது, அதற்கு மேலும் பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மும்பை ஆசாமி, போலீஸில் புகார் அளித்தார்.
அவர் கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை 8 வங்கி கணக்குகளுக்கு ரூ.1.27 கோடியை செலுத்தியுள்ளதை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த வங்கி கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘‘சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பல் முதலில் குறைந்த பணத்தை அனுப்பி மோசடி திட்டங்களை நம்ப வைக்கின்றனர். அதன்பின் மிகப் பெரிய அளவில் முதலீட்டை பெற்றபின், முதலீடு செய்தவர்களை ஏமாற்றிவிட்டு தப்பிவிடுகின்றனர்’’ என்றனர்.