சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி, வரும் 21-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த 2 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு வகைகளில் விஞ்ஞானரீதியாக ஊழல்களைப் புரிந்து மக்கள் விரோத அரசாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறிதும் கண்டுகொள்ளாமல், தன் குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரியது.
பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று, 15-ம் தேதி அதிமுக சார்பில் ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வர் பார்த்துவிட்டு வந்துள்ளார். இச்செயல் மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காதது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள் முதலியவற்றை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அதிமுக சார்பில் வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு, அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.