முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜி வகித்து வந்த பொறுப்புகளை இரு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையையும் கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநர் அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை தொடரச்செய்ய வேண்டும் என்ற முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்துள்ளார். குற்ற வழக்குகளை எதிர்கொண்டு நீதிமன்ற காவலில் உள்ளதால் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவதை ஆளுநர் ஏற்க மறுத்திருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.