பிரதாப்கர்: உத்தர பிரதேசத்தில், திருமணத்தின் போது வரதட்சணை கேட்டு மணமகன் தகராறில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த மணமகள் குடும்பத்தினர், அவரை பல மணி நேரம் மரத்தில் கட்டி வைத்தனர்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள மந்தடா என்ற இடத்தில், அமர்ஜீத் வர்மா என்பவருக்கு கடந்த 14ல் திருமணம் நடைபெற இருந்தது.
திருமணத்தில் மாலை மாற்றும் போது, மணப்பெண்ணிடம், அமர்ஜீத் வர்மாவின் நண்பர்கள் தவறாக நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம்அடைந்த பெண் வீட்டார், மணமகன் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சமயத்தில் பெண் வீட்டாரிடம், வரதட்சணை வேண்டும் என அமர்ஜீத் வர்மா கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், மணமகன் அமர்ஜீத் வர்மாவை மரத்தில் கட்டி வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த மந்தடா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, பல மணி நேரம் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த அமர்ஜீத் வர்மாவை மீட்டு, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
மணப்பெண்ணிடம், அமர்ஜீத் வர்மாவின் நண்பர்கள் தவறாக நடந்து கொண்டதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இது போதாதென்று, வரதட்சணை கேட்டு அமர்ஜீத் தகராறில் ஈடுபட்டதால் நிலைமை மேலும் மோசமானது.
திருமண ஏற்பாடுகளுக்கு பெண் வீட்டார் செலவு செய்த தொகையை, மணமகன் வீட்டாரிடம் இருந்து பெற்றுத் தர முயற்சி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்