பெங்களூர்: பெங்களூரில் 8 வயது சிறுமி சொன்ன ஒற்றை பொய்யால் உணவு வழங்க சென்ற டெலிவரி பாயை பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ட்விஸ்ட் கிடைத்தது. அதோடு டெலிவரி பாயை தாக்கியவர்கள் மன்னிப்பு கோரிய நிலையில் அவர் பெருந்தன்மையாக நடந்து கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
அசாமை சேர்ந்தவர் 30 வயது இளைஞர். இவர் பெங்களூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியை செய்து வருகிறார். கடந்த 12ம் தேதி காலை 9.40 மணியளவில் அந்த இளைஞர் உணவு டெலிவரி செய்வதற்காக பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள நீலாத்ரி ரோட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார்.
இந்த வேளையில் அடுக்குடிமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் உள்ள வசித்து வரும் தம்பதி தங்களின் 5 வயது மகனை பள்ளிக்கு அனுப்பி வைக்க வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதனால் வீட்டில் 8 வயது நிரம்பிய அந்த தம்பதியின் மகள் மட்டும் இருந்தாள்.
இதையடுத்து அந்த தம்பதி மீண்டும் தங்களின் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்களது வீட்டு கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு கிடந்தது. 8 வயது மகள் மாயமாகி இருந்தாள். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பக்கத்து வீட்டில் தேடிப்பார்த்தனர். அப்போது மகளை பற்றிய விபரம் தெரியவில்லை. இதற்கிடையே தான் சிறுமி மாயமான விவகாரம் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தேட தொடங்கினர்.
30 நிமிட தேடுதல் வேட்டைக்கு பிறகு அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டைமாடியில் சிறுமி மீட்கப்பட்டாள். இதையடுத்து சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர். அப்போது சிறுமி ‛உணவு டெலிவரி செய்ய வந்தவர் டோர்பெல்லை அடித்தார். நான் கதவை திறந்தபோது அவர் என்னை மொட்டை மாடிக்கு இழுத்து வந்துவிட்டார். நான் அவரது கையை கடித்து வைத்ததால் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டார்” என்றார்.
இதையடுத்து உடனடியாக அவர்கள் செக்யூரிட்டிகளை அலர்ட் செய்தனர். அடுக்குமாடி குடியிருப்புக்கு உணவு டெலிவரி செய்ய வந்தவர்களை வெளியே விட வேண்டாம் என கூறினர். இதையடுத்து அங்குள்ள டெலிவரி பாய்களை பிடித்து விசாரித்தனர். மேலும் சிறுமியை அடையாளம் காட்டும்படி கூறினர். அப்போது தான் அந்த சிறுமி அசாமை சேர்ந்த 30 வயது இளைஞரை அடையாளம் காட்டி அவர் தான் தன்னை மாடிக்கு கடத்தி சென்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர், செக்யூரிட்டிகள் அனைவரும் சேர்ந்து அந்த இளைஞரை கடுமையாக தாக்கினர். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக ஒய்சாலா வாகனத்தில் விரைந்து வந்தனர். போலீசாரிடம் இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த இளைஞர், ‛‛சார் நான் தவறு ஏதும் செய்யவில்லை. அந்த சிறுமி யாரென்று எனக்கு தெரியாது. அந்த சிறுமியை மொட்டை மாடிக்கு நான் அழைத்து செல்லவில்லை” என அழுதபடி கூறினார். இருப்பினும் சிறுமி உறுதியாக அவரை கைக்காட்டி அவர் தான் தன்னை மொட்டை மாடிக்கு இழுத்து சென்றதாக தெரிவித்தார். இருப்பினும் போலீசாருக்கு இந்த விஷயத்தில் சின்ன சந்தேகம் இருந்தது.
இதனால் மறுநாளான 13ம் தேதி போலீசார் அடுக்குமாடி குடியிருப்பு சென்று 7 வது மாடியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை பார்வையிட்டனர். அப்போது மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது தெரியவந்தது. இதனால் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அதற்கு அடுத்த நாள் அதாவது 14ம் தேதி போலீசார் அருகே உள்ள தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்கு செல்லும் படிக்கட்டில் சிறுமி மட்டுமே தனியாக நடந்து செல்வது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பதிவுகளுடன் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் விசாரித்தனர். இதையடுத்து சிறுமி வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்து. அப்போது அந்த சிறுமி பயத்துடன் உண்மையை கூறினார். அதாவது தன்னை யாரும் கடத்தவில்லை. வீட்டில் இருந்து மொட்டை மாடிக்கு அவளே சென்றதும், வீட்டில் அனைவரும் தேடுவதை அறிந்தும் மொட்டை மாடிக்கு சென்றதால் பெற்றோர் அடிப்பார்கள் என நினைத்தும் பொய்யாக டெலிவரி பாய் மீது குற்றம்சுமர்த்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் டெலிவரி பாயை விடுவித்தனர். அதோடு சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் டெலிவரிபாயிடம் மன்னிப்பு கோரினர். இந்த வேளையில் அந்த டெலிவரி பாய், ‛‛எனக்கும் 5 வயதில் மகள் உள்ளார். உங்களின் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையில் உங்களுக்கும், எனக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை. ஆனால் நான் தவறு செய்யவில்லை எனக்கூறியும் கூட நீங்கள் தொடர்ந்து என்னை தாக்கியது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என மனம்நொந்து கூறினார்.
இதையடுத்து தன்னை தாக்கியவர்கள் மீது புகார் அளிக்கும்படி போலீசார் டெலிவரி பாயிடம் கூறினார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இந்த வேளையில் டெலிவரி பாய், ‛‛விரைவில் நான் எனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த மாநிலமான அசாமுக்கு செல்ல உள்ளேன். இப்போது புகார் அளித்தால் சட்ட நடவடிக்கைக்காக மீண்டும் பெங்களூர் வர வேண்டி இருக்கும். இதற்கு செலவும் ஆகும். தற்போதைய சூழலில் என்னால் எந்த செலவையும் செய்ய முடியாது” எனக்கூறி புகார் அளிக்க மறுத்துவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட டெலிவரி பாய் கூறுகையில், ‛‛மாயமானதாக கூறப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து அனைவரும் என்னை கடுமையாக தாக்கினர். செக்யூரிட்டி பணியில் ஈடுபட்டவர்களும் என்னை அடித்தனர். நான் தவறு செய்யவில்லை. குழந்தையை கடத்தவில்லை எனக்கூறியும் அவர்கள் என்னை விடாமல் தாக்கினர். இதனால் எனது தோள்பட்டையில் பயங்கர வலி ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் நான் மனம் உடைந்து போய்விட்டேன்.
இதுபற்றி அறிந்த என மேனேஜர் எனக்கு விடுப்பு வழங்கி உள்ளார். உண்மையில் நான் எலக்ட்ரானிக் சிட்டி போலீசாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்கள் தான் என்னை காப்பாற்றினர். இருப்பினும் ஒரு கேள்வி எனக்குள் இருக்கிறது. அவ்வளவு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் சிசிடிவி கேமரா இல்லாமல் இருப்பது வியப்பாக உள்ளது. கேமரா இருந்திருந்தால் சிறுமி மாடிக்கு சென்றது பதிவாகி இருக்கும். நானும் தப்பித்து இருப்பேன். ” என வருத்தமாக கூறினார்.