கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மாதம் ஆட்சியமைத்த
காங்கிரஸ்
கட்சி ஒன்றிய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றனர். இலவச அரிசி வழங்குவது தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற முட்டுக்கட்டை போடுவதால் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் ஜூன் 20ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளது.
கர்நாடகாவில் ரேஷன் கடைகளில் ஏற்கனவே 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. கர்நாடகா தேர்தலின் போது காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ‘அன்ன பாக்யா’ என்ற திட்டத்தின்கீழ் மேலும் 5 கிலோ அரிசி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், இத்திட்டத்தை அமல்படுத்த செயல்படுத்த ஆயத்தமானது.
இந்த நிலையில், வெளிச்சந்தை விற்பனை திட்ட கொள்கையின்படி, வழங்கப்பட்டு வந்த அரிசி, கோதுமை பொருட்களை, பருவமழை தாமதம் மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், மாநிலங்களுக்கான விற்பனையை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது.
பாஜக பக்கம் நகர்வாரா செந்தில் பாலாஜி? அடி மேல் அடி.. அடுத்து என்ன நடக்கும்?
இதனால் காங்கிரஸ் கட்சி, தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் ஒன்றிய அரசை கண்டித்து வரும் ஜூன் 20ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக கர்நாடக துணை முதல்வரும், மாநில காங்கரஸ் கட்சித் தலைவருமான டி.கே.சிவகுமார் அறிவித்துள்ளார்.
“இது வெறுப்பு அரசியல். என்ன நடந்தாலும், நிச்சயமாக ‘அன்ன பாக்யா’ திட்டத்தை செயல்படுத்துவோம். எங்களுக்கு அரிசி வழங்குமாறு மற்ற மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். ஜூன் 20ஆம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரிலும் போராட்டம் நடத்த உள்ளோம்” என்று டி.கே.சிவகுமார் கூறினார்.