தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்குமான மோதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அமைச்சரவை இலாக்கா மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ஆளுநரின் நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவை சபாநாயகரும் கருத்து தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். அவரது இருதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜியின் உடல்நிலை காரணமாக அவர் வசம் இருந்த மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை முத்துசாமியிடமும் கூடுதலாக கவனித்துக் கொள்ள முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டார். இது தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கடிதம் திரும்ப வந்தது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு தான் உள்ளது. முதல்வரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது.
வழக்கு இருப்பதாலேயே ஒருவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க தேவையில்லை. முதலமைச்சரின் கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை தவிர்த்திருக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் சட்டப்படி சட்ட ஆலோசனைகளை பெற்று நடந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.