பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை சென்னைக்கு அழைத்து வந்து பரிசு வழங்கினார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
நடிகர் அரசியலுக்கு வருவதற்கு ஆழம் பார்க்கிறார். அதனாலே சட்டமன்றத் தொகுதி வாரியாக மாணவர்களை அழைத்திருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார் நல்ல குணமும், சிந்தனை திறனும் முக்கியம் என்று பேசினார். பாடப் புத்தகங்களோடு பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று கூறினார். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும் என்றார்.
அதைத் தொடர்ந்து அரசியல் குறித்து பேசத் தொடங்கியதும் கூட்டத்தில் கைத்தட்டல் அதிகமானது.
நாளைய வாக்காளர்கள் நீங்கள். அடுத்தடுத்து நல்ல நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். ஆனால் இங்கு நம் கையை வைத்து நம் கண்ணையே குத்தும் செயல் தான் நடக்கிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதைத் தான் சொல்கிறேன். ஒரு தொகுதியில் ஒன்றரை லட்சம் பேருக்கு 1000 ரூபாய் கொடுக்கிறார் என்றால் 15 கோடி ரூபாய் செலவாகும். அப்படியென்றால் அதற்கு முன்னர் அவர் எவ்வளவு சம்பாதித்திருப்பார்? இதை யோசித்துப் பாருங்கள்.
இதை நம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு மாணவியும் தங்கள் பெற்றோரிடம் சென்று ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் நடக்கும். அப்போது தான் உங்கள் கல்வி முழுமை பெறும்” என்றார்.