நாம் நினைத்தது போல் எதுவும் நடக்காது ; உண்மையாக இருக்க வேண்டும் : சமந்தா உருக்கம்

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை பிரிந்த பிறகு புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனமாடி பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா, மயோசிடிஸ் என்ற நோயின் பாதிப்புக்கும் உள்ளானார். என்றாலும் இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே இன்னொரு பக்கம் திரைப்படங்கள், வெப் சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது சிட்டாடல் வெப் சீரியலின் ஹிந்தி பதிப்பில் ஒரு ஸ்பை வேடத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இதற்காக தற்போது செர்பியா நாட்டில் முகாமிட்டுள்ளார் . அங்குள்ள ஒரு சர்ச்சுக்கு தான் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவு போட்டுள்ளார் சமந்தா.

அந்த பதிவில், மயோசிடிஸ் நோயினால் அவதிப்பட்டு வருவதால் கடந்த ஓராண்டில் எனது வாழ்க்கை பெரிய போராட்டக் களமாக மாறிவிட்டது. எனது உடம்புக்குள் பல போராட்டங்கள் நடந்தது. அதுமட்டுமின்றி சர்க்கரை, உப்பு, பருப்பு வகைகள் கூட உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு மாத்திரைகள் மட்டுமே பல நேரங்களில் உணவாக்கப்பட்டது. அதே நேரத்தில் தொழில் முறையில் சில தோல்விகள் என்னை மேலும் பாதித்தது.

கடந்த ஓராண்டு கால பிரார்த்தனை பூஜைகள் எந்த ஒரு பரிசையும் எதிர்பார்த்து நான் கடவுளை பிரார்த்தனை செய்ததில்லை. மனவலிமைக்காகவும் அமைதிக்காகவும் தான் பிரார்த்தனை செய்தேன். சில சமயம் பெரிய வெற்றி என்பது அவசியம் இல்லை. முன்னோக்கி நகர்வதையே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன். எல்லா நேரத்திலும் நாம் நினைப்பது எல்லாம் நடக்காது என்பதை கடந்த ஆண்டில் நான் கற்றுக் கொண்டேன். ஒரு சிலவற்றை கட்டுப்படுத்த வேண்டும், மீதி உள்ளவற்றை விட்டுவிட வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்.

கடந்த காலங்களில் நடந்த சோகங்கள், தோல்வியை நினைத்து அதில் மூழ்கி விடக்கூடாது. நாம் நேசிப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும். உங்களில் பலர் கடினமான சூழ்நிலையை சந்தித்திருப்பீர்கள், உங்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் சில விஷயங்களை தாமதம் செய்யலாம். ஆனால் கைவிட மாட்டார்.

இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.