ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என பெற்றோரிடம் சொல்லுங்க : மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

சென்னை : 10, 12ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவர்களுக்கு நடிகர் விஜய், விருது மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். அவர்களிடம் பேசிய அவர் ‛‛ஒட்டுக்கு பணம் வாங்க கூடாது என பெற்றோரிடம் சொல்லுங்க'' என அறிவுரை வழங்கினார்.

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தாலும் மற்றொருபுறம் தனது அரசியல் தொடர்பான அடுத்தடுத்த நகர்வுகளையும் மெல்ல துவங்கி உள்ளார். சமீபத்தில் தலைர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க உத்தரவிட்ட விஜய், அடுத்து உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கினார்.

இதன் அடுத்தக்கட்டமாக 10, 12ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவர்களை இன்று(ஜூன் 17) விஜய் சந்தித்தார். மாணவர்களுக்கு விஜய் கல்வி விருது வழங்கும் விழா என்ற பெயரில் நடந்த இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடந்தது. தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை வழங்கினார். சுமார் 1400 மாணவர்கள் இந்த ஊக்கத் தொகையை பெற்றனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கினார் விஜய்.

ஒழுக்கமும், சிந்தனை திறனும் முக்கியம்
மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய் : ஒரு பொறுப்புணர்வு வந்தது போன்று உணர்கிறேன். நான் சுமாராக படிக்கும் மாணவன் தான். உங்க அளவுக்கு எனக்கு படிப்பு வராது. எனக்கு என் கனவு, பயணம் எல்லாம் சினிமா மட்டுமே இருந்தது. ‛‛காடு, பணம் இருந்தா எடுத்துக்குவாங்க, ஆனால் உங்களிடம் உள்ள கல்வியை மட்டும் யாராலும் எடுக்க முடியாது'' என அசுரன் பட டயலாக்கை சுட்டிக்காட்டினார். வாழ்க்கையில் இலவசமாக கிடைப்பது அட்வைஸ் மட்டும்தான். ஆனால் உங்களுக்கு அது பிடிக்காது. அதை தாண்டி இந்த விழாவில் என்ன பேசுவது தெரியவில்லை.

கல்வி முக்கியம் அதை விட உங்களின் கேரக்டர் மற்றும் சிந்திக்கும் திறனுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். வாழ்க்கையில் என்ஜாய் பண்ணுங்க, ஆனால் உங்களின் சுய அடையாளத்தை இழந்துவிடாதீர்கள். சமூக வலைதளத்தில் வரும் எல்லாம் தவகல்களையும் உண்மை என நம்ப வேண்டாம். படிப்புடன் ஒழுக்கமும், சிந்தனை திறனும் ரொம்ப முக்கியம். எல்லா தலைவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

காசு வாங்கி ஓட்டு போடாதீங்க
நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க போறீர்கள். நம் விரலை வைத்து நாமே கண்ணை குத்துவது தான் இப்போது நிகழ்கிறது. காசு வாங்கி ஓட்டு போடாதீங்க என உங்கள் பெற்றோர்களிடம் நீங்கள் சொல்லுங்க. நீங்க சொன்ன கண்டிப்பாக அவர்கள் கேட்பார்கள்.

தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் உடன் நேரம் செலவிடுங்க. தேர்வில் எப்படி வெற்றி பெறுவது என அவர்களுக்கு எடுத்து சொல்லுங்க. நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றால் எனக்கு கொடுக்கும் ஒரு பரிசாக எடுத்துக் கொள்வேன். வெற்றி அடைந்தவர்களுக்கு வாழ்த்துகள். தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெற எனது வாழ்த்துகள். மாணவர்களே எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவு மட்டும் எடுக்காமல் வாழ்க்கையில் முன்னேறி செல்லுங்கள். நீங்கள் செய்ய நினைப்பதை தைரியமாக முன்னெடுத்து செல்லுங்கள். உங்களை டிஸ்கரேஜ் செய்ய ஒரு கூட்டம் இருக்கும். அதையெல்லாம் எடுத்துக்காதீங்க. உங்களுக்குள் ஒருவர் இருப்பார். அவர் சொல்லுவதை கேளுங்க. வந்த எல்லோருக்கும் நன்றி. வளர்ப்போம் கல்வி, வளர்க என்னுடைய குட்டி நண்பா, நண்பி. நன்றி

இவ்வாறு விஜய் பேசினார்.

தமிழ்தாய் வாழ்த்து உடன் நிகழ்ச்சி துவங்கியது. முன்னதாக மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் விஜய்க்கு நினைவு பரிசு வழங்கினார். அதை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தார் விஜய். தொடர்ந்து மாணவர்கள் அமர்ந்துள்ள பகுதிகளில் விஜய்யும் அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்காக பொதுவெளியில் பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது என மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் இன்று இந்த விழா நடப்பதால் காலை முதலே விஜய் வீட்டில் ஏராளமான ரசிகர்கள் கூடினர். விழா அரங்கிலும் ரசிகர்கள் கூடி உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சமூகவலைதளத்தில் #தளபதிவிஜய்கல்விவிருது, #VIJAYHonorsStudents ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.