2023 உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. போட்டியின் அட்டவணையை ஐசிசி இன்னும் அறிவிக்கவில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒருநாள் உலகக் கோப்பைக்கான வரைவு அட்டவணையை ஐசிசிக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுடனும் ஐசிசி அட்டவணையைப் பகிர்ந்துள்ளது. இதன் மூலம் அவர்களின் கருத்துக்களைப் பெற்று தேவையான மாற்றங்களை ஐசிசி மற்றும் பிசிசிஐ செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் வகையில் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஆனால் அங்கு விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அகமதாபாத்தில் விளையாட பிசிபி மறுத்ததற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார். அகமதாபாத் ஆடுகளத்திற்கு பேய் இருக்கிறதா என்று பிசிபியை அவர் கடுமையாக சாடினார். அஃப்ரிடி உள்ளூர் செய்தி சேனலிடம் பேசும்போது, “அகமதாபாத்தில் ஏன் அவர்கள் (பிசிபி) விளையாட மறுக்கிறார்கள்?. அங்கிருக்கும் பிட்ச் என்ன நெருப்பை உமிழ்கிறதா அல்லது பேய் ஏதாவது இருக்கிறதா?” என கடுமையான கேள்விகளை முன்வைத்தார்.
அஃப்ரிடி மேலும் கூறுகையில், ” எங்கு வேண்டுமானாலும் சென்று விளையாடுங்கள், வெற்றி பெறுங்கள். இவை சவால்கள் என்றால், அவற்றை முறியடிக்க ஒரே வழி அபார வெற்றி. இறுதியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதுதான் முக்கியம். அதுதான் முக்கியம். இந்திய அணிக்கு அங்கு வசதியாக இருந்தால், நீங்கள் சென்று, நிரம்பிய இந்தியக் கூட்டத்தின் முன் வென்று, நீங்கள் சாதித்ததை அவர்களுக்குக் காட்ட வேண்டும்.” என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
ஐசிசி அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தானில் பிசிபி தலைவர் நஜாம் சேத்தியைச் சந்தித்தனர். அப்போது, அவர் பாகிஸ்தான் அணி அகமதாபாத்தில் உலகக் கோப்பை விளையாடாது என்று தெரிவித்துள்ளார். உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குச் செல்ல பாகிஸ்தான் அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தால் சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் போட்டிகளை ஏற்பாடு செய்ய ஐசிசி கோரிக்கையும் அவர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.