சென்னை:
மாணவர்களுக்கு பரிசு வழங்கிய நிகழ்ச்சியில் விஜய் பேசிய அரசியல் பேச்சுகள்தான் தற்போது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவரது பேச்சில் இருந்து ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. அதாவது, ரஜினி செய்த அரசியல் தவறுகளில் இருந்து விஜய் பல பாடங்களை கவனமாக கற்றிருக்கிறார் என்பது தான் அது. அது குறித்து இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
1990-களின் காலக்கட்டத்தில்.., சரியாக சொல்ல வேண்டும் என்றால் ‘பாட்ஷா’ திரைப்படம் வெளியே வந்த நேரம். சினிமாவில் ரஜினி எட்டியிருந்த உயரத்தை இதுவரை எந்த நடிகரும் தொடவில்லை என்பதுதான் உண்மை. புகழின் உச்சியில் இருந்த ரஜினிக்கு அப்போது அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. மேலும், அதற்கு முன்பிருந்தே பல திரைப்படங்களில் அரசியல் வசனங்களை பேசி பக்காவாக ட்யூன் செய்து வைத்திருந்தார் ரஜினி. குறிப்பாக ஜெயலலிதாவை பட்டவர்த்தனமாக அவர் எதிர்த்தது ரஜினி ரசிகர்களை ஏகத்துக்கும் சந்தோஷப்படுத்தியது.
ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாமல், தமிழக மக்களின் பெரும்பாலானோர் ரஜினியின் அரசியல் வருகையை பெரிதும் எதிர்பார்த்தனர். ஜெயலலிதாவின் எதேச்சதிகார அரசியலை கண்டு வெறுத்துபோன மக்கள், அவருக்கு எதிராக களமாடக் கூடிய நாயகனாக ரஜினியை பார்த்தனர்.
தவறவிட்ட ரஜினி:
உண்மையில் சொல்லப்போனால், ரஜினி எங்கு அரசியலுக்கு வந்துவிடுவாரோ என திமுகவும், அதிமுகவும் கூட அப்போது பதற்றத்தில் தான் இருந்தது. அன்றைக்கு 43 வயதே நிரம்பியிருந்த ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். வந்திருந்தால், நிச்சயம் அவர் எதிர்பார்த்த இடம் கிடைத்திருக்கும். ஏனெனில், அந்த காலக்கட்டம் என்பது இப்போது இருப்பது போல ‘தமிழ் உணர்வு’ பரவலாக இல்லாத நேரம். தனக்காக கனிந்து வந்த காலத்தை ரஜினி தவறவிட்டார். ரஜினி செய்த அந்த மாபெரும் தவறில் இருந்து இப்போது விஜய் பாடம் கற்றுக்கொண்டுள்ளார்.
சுதாரித்துக் கொண்ட விஜய்:
புகழும், மக்கள் செல்வாக்கும், அரசியல் வானிலையும் ஒரே மாதிரியாக தொடர்ந்து கொண்டே இருக்காது. தனக்கு மக்கள் ஒரு இடத்தை தந்திருக்கும் போதே, அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் ரஜினியின் தவறில் இருந்து விஜய் புரிந்து கொண்ட உண்மை.. இதுதான், விஜய்யை புகழின் உச்சியில் இருக்கும் போதே அரசியல் களத்தில் நுழைய ஆயத்தமாக்கி இருக்கிறது.
இரண்டாவது பாடம்:
ரஜினி ஒரு மிகப்பெரிய வரலாற்று பிழையை செய்த போதிலும் அவரை காலம் கைவிடவில்லை. இரண்டாவது வாய்ப்பையும் கொடுத்தது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் மறைந்த பிறகு உருவான வெற்றிடத்தை நிரப்ப ரஜினிக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அப்போது கூட அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்ததும் பெரும் அதிர்வலைகள் தமிழகத்தில் உருவாகின. ஆனால், தமிழக மண்ணுக்கு சுத்தமாக பொருந்தாத அரசியலை பேசினார் ரஜினி. திரைப்படங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் ரஜினியை தான் நிஜ வாழ்க்கையிலும் மக்கள் எதிர்பார்த்தனர்.
ரஜினி பேசிய பாஜக அரசியல்:
ஆனால், ரஜினியோ அதற்கு முற்றிலும் புறம்பான கருத்துகளை பேசினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் சுட்டுக்கொன்ற போது, போலீஸுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார் ரஜினி. அது மட்டுமா? ஆன்மிகத்தின் பெயரால் நிகழ்ந்த பல்வேறு கொடுமைகளை உடைத்து வந்த திராவிட மண்ணான தமிழகத்தில் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப் போவதாக ரஜினி பிரகடனம் செய்தார். அதேபோல, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த மாபெரும் தலைவர்களான பெரியார், அம்பேத்கரை புறந்தள்ளிவிட்டு, எம்ஜிஆரே தனது அரசியல் குரு என அறிவித்தார். அதேபோல, ரஜினி பேசிய சித்தாந்தங்கள் யாவும் பாஜகவின் தமிழ் டப்பிங்காகவே இருந்தது. இதனால் ரஜினியின் அரசியல் பிரவேசம் பிசுபிசுத்து போனது.
மண்ணுக்கு ஏற்ற அரசியல்:
ரஜினியின் இந்த தவறுகளையும், சறுக்கல்களையும் பார்த்த விஜய், தனது அரசியல் பாதையை முன்கூட்டியே தீர்மானத்திருப்பது இன்றைய மேடையில் நன்றாக தெரிந்தது. ரஜினியை போல இல்லாமல் தமிழக அரசியலுடன் பின்னி பிணைந்திருக்கும் பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரை முன்னிறுத்தியுள்ளார் விஜய். மேலும், ரஜினி தூக்கிப்பிடித்த இந்துத்துவத்தையும், எம்ஜிஆரையும் விஜய் தொடவே இல்லை. அதே சமயத்தில், தமிழகத்துடன் தன்னை சுருக்கிக் கொள்ளும் தமிழ் தேசியத்தையும் அவர் கையில் எடுக்கவில்லை. இவ்வாறு ரஜினி சென்ற தவறான அரசியல் பாதையை பார்த்து, தனது அரசியல் வழியை சரியாக அமைத்துள்ளார் விஜய். ரஜினியை பார்த்துதான் தான் சினிமாவுக்கு வந்ததாக விஜய்யே பல முறை சொல்லி இருக்கிறார். ஒரு வகையில், அரசியலிலும் ரஜினிதான் தனக்கு வழிகாட்டி என்பதை இன்றைய மேடையில் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் விஜய்.