பிறந்து 2 நாளில் இறந்த குழந்தை.. பஸ்சில் சென்ற தந்தையின் பையில் என்ன அது? அய்யோ இதயமே நொறுங்குதே

போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்து 2 நாள் ஆன பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் அமரர் ஊர்தி வசதியில்லாததால் இறந்த குழந்தையின் தந்தை செய்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில் பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இறந்த நிலையில் அதன்பிறகு நடந்த சம்பவம் ஒன்று இதயத்தை உலுக்கும் வகையில் உள்ளது. இந்த சோக சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

மத்திய பிரதேச மாநிலம் டின்டோரி மாவட்ம் சகாஜ்பூரி கிராமத்தை சேர்ந்தவர் சுனில் துர்வே. இவருக்கும் ஜம்னி பாய் என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. ஜம்னி பாய் கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து அவர் டின்டோரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 13ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தான் குழந்தையின் மிகவும் பலவீனமாக இருந்துள்ளது. உடல்நலனில் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜபால்பூர் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்லும்படி டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பச்சிளம் குழந்தை ஜபால்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 15ம் தேதி இறந்ததாக கூறப்படுகிறது. பிறந்து 2 நாட்களே ஆன நிலையில் உடல்நலக்குறைவால் அந்த குழந்தையின் உயிர பிரிந்தது. இதையடுத்து குழந்தையை வீட்டுக்கு எடுத்து செல்ல அமரர் ஊர்தி வாகனத்தை மருத்துவமனை நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அமரர் ஊர்தி வசதி மருத்துவமனையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தையின் தந்தையான சுனிலும் ஏழ்மை நிலையில் இருக்கிறார். இதனால் தனியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து செல்ல அவரால் முடியவில்லை. இதனால் அவர் இறந்த தனது பச்சிளம் குழந்தையை ஒரு பையில் போட்டு பஸ்சில் வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார். ஜபால்பூரில் இருந்து டின்டோரி 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலையில் குழந்தையின் உடலை பையில் போட்டு சுனில் வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார்.

இதுதொடர்பான தகவல்கள் வேகமாக பரவிய நிலையில் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து விசாரணை தொடங்கியது. இதுபற்றி மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சஞ்சய் மிஸ்ரா கூறுகையில், ‛‛ஜபால்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்போது குழந்தை உயிரோடு தான் இருந்தது. இந்த வேளையில் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர். அதற்கு டாக்டர்கள் மறுத்துள்ளனர். குழந்தையின் உடல்நலம் மோசமான நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி டிஸ்சார்ஜ் செய்ய மறுத்துள்ளனர்” என்றார்.

இதன்மூலம் குழந்தையின் பெற்றோர் தான் வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும், குழந்தை இறந்த நிலையில் பஸ்சில் வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதனை சுனில் மறுத்துள்ளார். இதுபற்றி சுனில் கூறுகையில், ‛‛ஜபால்பூர் மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி எனது குழந்தை இறந்தது. அமரர் ஊர்தி கேட்டதற்கு அதுபோன்ற வசதி இல்லை என கூறிவிட்டனர். இதனால் பஸ்சில் குழந்தையின் உடலை எடுத்து சென்றேன்” என்றார். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.