\"தமிழ்நாடு அரசு\" மாடல்.. வடக்கே ஈர்த்த ஸ்டாலினின் சரவெடிகள்.. \"வலையை\" வீசிய பிரியங்கா.. சக்ஸஸ்தானா?

போபால்: தமிழ்நாட்டின் மாடல், வடமாநிலங்களில் எதிரொலித்து கொண்டிருக்கின்றன.. இதையடுத்து, தமிழகத்தின் திட்டங்களுக்கான மவுசுகள் கூடிவருகின்றன.
கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், எப்படியாவது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளானது.. பாஜக மீதான அம்மக்களின் அதிருப்திகளை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவைகளையே தங்கள் வாக்குகளாக மாற்றும் யுக்தியை மேற்கொள்ள முடிவு செய்தது.

ராகுல் அதிரடி: அதில் ஒன்றுதான், தேர்தல் வாக்குறுதிகள்.. எத்தனையோ வாக்குறுதிகளை ராகுல் காந்தி பிரச்சாரத்தின்போது வழங்கியிருந்தார்.. ஆனால், அதில் பெரும்பாலானோரை ஈர்த்தது, ஒரே ஒரு விஷயம்தான்..

ராகுல் பிரச்சாரத்தில், “நான் இப்போது ஒரு வாக்குறுதியை உங்களுக்கு தருகிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால், முதல் நாளிலிருந்து பெண்கள் அரசு பேருந்தில் இலவச பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும்” என்று சொன்னதுமே, அம்மாநில மக்கள் திகைத்து போனார்கள்.. அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை, என்று அடுக்கடுக்காக ராகுல் அறிவித்திருந்தார்.

திமுக ஸ்டைல்: இதெல்லாம் தமிழக முதல்வர் ஸ்டாலின் நமக்கு தெரிவித்த வாக்குறுதிகளாகும்.. இதில், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை முதல்நாளே, கையெழுத்து போட்டு அமல்படுத்தியிருந்தார் ஸ்டாலின்.. அதே ஸ்டைலில் ராகுலும் வாக்குறுதி தந்தது, கர்நாடக மக்களை வெகுவாக ஈர்த்திருந்தது.. எதிர்பார்த்ததைபோலவே காங்கிரஸ் வெற்றி பெற்றது. துவண்டு கிடந்த கட்சிக்கு, கர்நாடக வெற்றியானது, மிகப்பெரிய துடுப்பாக இன்று மாறியிருக்கிறது.

இந்த வெற்றியை வைத்துதான், இனி அடுத்தடுத்த தேர்தல்களையும் காங்கிரஸ் சந்திக்க வேண்டியிருக்கிறது.. இந்த சூட்சுமத்தை பிரியங்கா காந்தியும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார் போலும்.. மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில், தேர்தல் பணிகள் தொடக்க விழாவில் பிரியங்கா கலந்து கொண்டார்.. அப்போது உற்சாக மூடில் காணப்பட்டார். தமிழ்நாடு மாடல் பிரச்சார யுக்தியையே, அந்த மாநிலத்திலும் புகுத்தியிருக்கிறார் பிரியங்கா.

கரண்ட் கட்டணம்: ஆம்.. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 யூனிட் வரை இலவச மின்சாரம். அதற்கு மேல் 200 யூனிட் வரை பாதி மின்சார கட்டணம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.. பெண்களுக்கான சிறப்பு திட்டத்தையும் அறிவித்துள்ளார். அதாவது, ஏற்கனவே அந்த மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்திருப்பதால், அதில் இருந்து ஒரு படிமேல்போய், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவித்து அதிரடியை கிளப்பி உள்ளார்..

சமையல் கியாஸ்: சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு 500 ரூபாய் மானியம் என்பது உட்பட ஏகப்பட்ட வாக்குறுதிகளை நம்ம தமிழ்நாடு மாடலிலேயே அறிவித்திருக்கிறார்.. பிரியங்கா வீசியிருக்கும் “வாக்குறுதி வலையில்” மத்திய பிரதேசம் சிக்குமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.