விஜய் சார் கவனிச்சீங்களா.. ஸ்டேட் செகண்ட் வாங்குன மாணவியை விட்டுட்டீங்களே..! வேதனை

சென்னை:
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசு கொடுத்துள்ள நிலையில், 10-ம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவியை விழாவுக்கு அழைக்காதது தற்போது தெரியவந்துள்ளது. விஜய் அழைப்பார் என நம்பியிருந்த ஏழை மாணவி, எந்த அழைப்பும் வராததால் வேதனை அடைந்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 6 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ரொக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி வருகிறார். அதாவது தொகுதிக்கு 6 பேர் வீதம் 1404 பேருக்கு விஜய் பசிசஇதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு வைர நெக்லஸை விஜய் பரிசாக அளித்தார்.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்ய வட்டம் நாய்க்காரன்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த லட்சுதா என்ற மாணவி, நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 496 பெற்றிருக்கிறார். இவர் தமிழக அளவில் இரண்டாம் இடம்பிடித்த மாணவி ஆவார். ஆனால், வேதாரண்யம் தொகுதியில் இந்த மாணவியை விட்டுவிட்டு வேறு மாணவ, மாணவிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்ந்தெடுத்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய்யிடம் இருந்து தனக்கு அழைப்பு வரும் என எண்ணியிருந்த ஏழை மாணவி லட்சுதா கவலையில் ஆழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்ததால் நாகை மாவட்ட ஆட்சியர் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். தற்போது விஜய் சார், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுப்பதாக அறிவித்ததால் தனக்கும் அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.