பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை சென்னைக்கு அழைத்து வந்து இன்று (ஜூன் 17) பரிசு வழங்கினார் நடிகர் விஜய். நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய விஜய், “நாளைய வாக்காளர்கள் நீங்கள். அடுத்தடுத்து நல்ல நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். ஆனால் இங்கு நம் கையை வைத்து நம் கண்ணையே குத்தும் செயல் தான் நடக்கிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதைத் தான் சொல்கிறேன். ஒரு தொகுதியில் ஒன்றரை லட்சம் பேருக்கு 1000 ரூபாய் கொடுக்கிறார் என்றால் 15 கோடி ரூபாய் செலவாகும். அப்படியென்றால் அதற்கு முன்னர் அவர் எவ்வளவு சம்பாதித்திருப்பார்? இதை யோசித்துப் பாருங்கள்.
இதை நம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு மாணவியும் தங்கள் பெற்றோரிடம் சென்று ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் நடக்கும். அப்போது தான் உங்கள் கல்வி முழுமை பெறும்” என்று பேசினார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாகவே இது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். விஜய் அரசியலுக்கு வரும் போது தமிழ்நாட்டு அரசியலில் திமுக சார்பாக
தான் எதிராக நிற்பார். இருவருக்குமிடையே தான் அடுத்தகட்ட அரசியல் பயணம் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் இன்றைய நிகழ்ச்சி, மற்றும் அவரது பேச்சு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “நடிகர் விஜய் பேசிய நிகழ்ச்சியை நான் இன்னும் பார்க்கவில்லை. ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று அவர் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இவர்கள் வரலாம், இவர்கள் வரக்கூடாது என்றெல்லாம் சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்று தெரிவித்தார்.