ராமநாதபுரம்: முதல்வர் கோப்பைக்கான பரிசளிப்பு விழாவில் எம்.பி., நவாஸ்கனி, அமைச்சர் ராஜகண்ணப்பனிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியரை கட்சியினர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கோவிந்தராஜலு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கி பேசுகையில், “கிராமப்புறங்களில் இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஒரு மாதம் காலம் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என 8190 பேர் பங்கேற்று உள்ளனர். இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 1851 வீரர், வீராங்கணைகளுக்கு ரூ. 41.58 லட்சத்திற்கான பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்க ரூ.3000, ரூ.2000, ரூ.1000 பரிசுத்தொகையும், பாராட்டு சான்றும் வழங்கப்படுகிறது. இவர்கள் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்” என பேசினார்.
முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் முன்கூட்டியே வந்ததால் பகல் 2.45 மணிக்கு விழா தொடங்கிவிட்டது. அப்போது 2.50 அங்கு வந்த எம்பி நவாஸ்கனி, நான் வருவதற்கு முன்பே, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஏன் விழாவை தொடங்கினீர்கள் என அமைச்சரிடம் கேட்டார். அதற்கு, எம்பி முன்கூட்டியே விழாவிற்கு வர வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
எம்பியை, ஆட்சியர் சமாதானம் செய்து கொண்டிருந்தார். அந்நேரம் அங்குகூடிய இருதரப்பைச் சேர்ந்த தொண்டர்களில் சிலர் ஆட்சியரை கீழே தள்ளிவிட்டனர். கீழே விழுந்த ஆட்சியரை அவரது தனி பாதுகாப்பு போலீஸாரும், அருகில் இருந்தவர்களும் தூக்கிவிட்டனர். இருதரப்பு தொண்டர்களுக்கு இடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவ்விழாவில் கலந்து கொள்ளாமல் எம்பி நவாஸ்கனி வெளியேறிச் சென்றார்.
பின்னர் எம்பி நவாஸ்கனி செய்தியாளர்களிடம் கூறும்போது, “விழாவை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே துவங்கிவிட்டனர். விழா ஏற்பாடுகளை ஆட்சியர் தான் செய்துள்ளார். அதனால் ஆட்சியரின் நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளரிடம் புகார் தெரிவித்துள்ளேன்” எனக்கூறினார்.
இதுகுறித்து ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரனிடம் கேட்டபோது, “விழா தொடங்கியது குறித்து அமைச்சரிடம் கேட்டுக்கொண்டிருந்த எம்பியை சமாதானம் செய்தேன். அப்போது சிலர் என்னை கீழே தள்ளிவிட்டனர். இதுகுறித்து விசாரணை செய்யப்படும்” எனக்கூறினார்.