சென்னை: நடிகர் அஜித் நடித்த வேதாளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான நடிகர் கபிர் சிங் துஹானுக்கு விரைவில் திருமணம் ஆகப் போவது உறுதியாகி உள்ளது.
கோபிசந்த், ராஷி கன்னா நடித்து 2015ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஜில் படத்தின் மூலமாக வில்லனாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார் கபிர் துஹான் சிங்.
அதன் பின்னர் வேதாளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மிரட்டி உள்ளார்.
தமிழில் கபிர் துஹான் சிங்: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ள கபிர் துஹான் சிங் பார்க்கவே முரட்டுத்தனமாக ஆஜானுபாகுவை போல வாட்டச் சாட்டமாக இருப்பவர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லக்ஷ்மி மேனன் நடித்த வேதாளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான இவர், விஜய் சேதுபதியின் றெக்க, விஷாலின் ஆக்ஷன், சித்தார்த்தின் அருவம் மற்றும் ராகவா லாரன்ஸின் காஞ்சனா உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
கணக்கு டீச்சருடன் திருமணம்: 38 வயதாகும் நடிகர் கபிர் துஹான் சிங் கடைசியாக சமந்தாவின் சாகுந்தலம் படத்தில் அசுரனாக நடித்திருந்தார். கன்னடத்தில் வெளியான கப்ஜா படத்திலும் நடித்திருந்தார். டோவினோ தாமஸின் புதிய படத்தின் மூலம் மலையாளத்திலும் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
இந்நிலையில், நடிகைகளுடன் காதல் வலையில் எல்லாம் சிக்காமல் இருந்து வந்த கபிர் துஹான் சிங் வீட்டில் பார்த்த கணக்கு டீச்சரான சீமா சஹால் என்பவரை திருமணம் செய்துக் கொள்ள உள்ளார்.
திருமணம் எப்போ: ஹரியானாவைச் சேர்ந்த சீமா சஹால் உடன் நடிகர் கபிர் துஹான் சிங் வரும் ஜூன் 23ம் தேதி டெல்லியில் உள்ள ரெசார்ட் ஒன்றில் திருமணம் செய்ய உள்ளார்.
ஜூன் 21ம் தேதி கிர்தான் எனும் சடங்குடன் தொடங்கும் இவரது திருமணம் ஜூன் 22ம் தேதி மெஹந்தி மற்றும் ஜூன் 23ம் தேதி தாலி கட்டும் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஆனால், இந்த திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்து மிகவும் எளிமையான முறையில் நடத்த விருப்பதாகவும் திரையுலக பிரபலங்களுக்கு தனியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.