வைர நெக்லஸை விடுங்க.. ஒரு போர்வை, தலையணை கூட தரவில்லையாமே.. விஜய் கூட்ட பரிதாபங்கள்!

சென்னை:
தமிழ்நாடு முழுவதும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கி பாராட்டியது ஒருபுறம் இருக்க, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நேற்று இரவு படுக்க பாய், போர்வை, தலையணை என எதையுமே கொடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

நடிகர் விஜய்யின் சமீபகால நகர்வுகளை பார்க்கும் போது, அவர் அரசியலுக்கு வர ஆயத்தமாவதை காட்டுவதாக உள்ளது. குறிப்பாக, சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தனது ரசிகர்களுக்கு விஜய் அறிவுறுத்தி இருந்தார். இதேபோல், உலக பட்டினி தினத்தன்று 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள ஏழை மக்களுக்கு ஒருவேளை மதிய உணவு விஜய் மக்கள் இயக்த்தினரால் வழங்கப்பட்டது.

இவை யாவும் தனது அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டமாக விஜய் செய்து வருவதாக தகலவறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், இன்று 234 தொகுதிகளிலும் 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை விஜய் வழங்கினார். இதில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினிக்கு விஜய் வைர நெக்லஸை பரிசளித்தார்.

விஜய்யின் இந்த செயல்கள் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வரும் அதே சமயத்தில், இந்நிகழ்ச்சிக்காக விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த ஏற்பாடுகள் பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளன. அதாவது, இந்த நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களிடம், முதலில் சென்னைக்கு வரும் செலவை தாங்களே பார்த்துக் கொள்வதாக தான் விஜய் மக்கள் இயக்கத்தினர் கூறினார்களாம். ஆனால், நிகழ்ச்சிக்கு இரு தினங்களுக்கு முன்பு, விஜய் பரிசு மட்டும்தான் தருவார். மற்ற செலவுகளை நீங்களேதான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியதாக தெரிகிறது.

இதற்கு சம்மதித்து மாணவர்களும், பெற்றோர்களும் வந்த நிலையில், நேற்று இரவு அவர்கள் தங்குவதற்காக நீலாங்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு தேவையான பாய், தலையணை, போர்வை போன்ற அடிப்படை பொருட்களை கூட விஜய் மக்கள் இயக்கத்தினர் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வெறும் தரையில் படுத்து குளிரிலும், கொசுக்கடியிலும் போர்வை இல்லாமல் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டதாக மாணவர்கள் வேதனையுடன் கூறியதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.