மயிலாடுதுறையில், போட்டோ ஸ்டியோவுக்குள் புகுந்து அங்கு பணியாற்றிய பெண் ஊழியரின் தாலிச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்ற நபரை பெண் போலீஸ் ஒருவர் மடக்கிப் பிடித்து கைது செய்தார்.
பட்டமங்கல தெருவில் உள்ள அந்த ஸ்டியோவிற்கு வந்த திருடன், குடிக்க தண்ணீர் கேட்பது போன்று பெண் ஊழியரின் கவனத்தைத் திசை திருப்பி, கையில் தயாராக கொண்டு வந்திருந்த மண்ணை முகத்தில் தூவினான். பின்னர் பெண் ஊழியர் அணிந்திருந்த துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை இறுக்கி தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினான்.
இச்சம்பவம் பற்றி புகார் வந்ததை அடுத்து சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்த திருடனின் புகைப்படம் போலீசார் மத்தியில் பகிரப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறை உளவு பிரிவு பெண் தலைமை காவலர் கோப்பெருந்தேவி ரயிலடி ரோட்டில் சென்ற போது, அவ்வழியாக நடந்து போன திருடனை அடையாளம் கண்டு கொண்டார்.
உடனே அங்கிருந்த இளைஞர்கள் 2 பேரின் உதவியுடன் திருடனை மடக்கிப் பிடித்து கைது செய்தார். பிடிபட்ட கூறைநாட்டைச் சேர்ந்த ரஜாக்கிடம் இருந்து திருடப்பட்ட நகை பறிமுதல் செய்யப்பட்டது.