சென்னை: கோலிவுட் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் அடுத்து அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
முன்னதாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியிருந்தார்.
இந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுத்த நிலையில், தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இந்தமுறை படையப்பா படத்தில் ரஜினியுடன் நடித்த அனு மோகன் விஜய் தான் சூப்பர் ஸ்டார் எனக் கூறியுள்ளார்.
விஜய் தான் சூப்பர் ஸ்டார்: லியோ படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து தளபதி 68ல் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் உச்சம் தொட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் தளபதி 68 படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என நடிகர் அனு மோகன் பேசியது வைரலாகி வருகிறது.
சீரியல்களில் நடித்து பிரபலமான அனுமோகன், பல படங்களில் ஸ்கிரிப்ட் ரைட்டராக பணியாற்றியுள்ளார். பின்னர் சினிமாவிலும் நடிக்கத் தொடங்கிய அனு மோகனுக்கு படையப்பா படம் கம்பேக் கொடுத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. இதில், “பாம்பு புத்துக்குள்ள கைய விட்டீங்க… கடிக்கலையாங்” என கொங்கு தமிழ் பேசி ரசிகர்களை கவர்ந்தார்.
படையப்பா படம் முழுக்க அனுமோகன் பேசியது இந்த வசனம் மட்டுமே. அதன்பின்னர் விஜய்யுடன் மின்சார கண்ணா, பத்ரி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அனுமோகன், விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் விஜய்யுடன் மின்சாரா கண்ணா படத்தில் நடித்ததை மறக்கவே முடியாது. படையப்பா மாதிரி இந்தப் படத்திலும் திரும்ப திரும்ப ஒரே வசனம் தான் பேசியிருப்பேன்.
“புறாவுக்கே பெல் அடிச்சவர்ங்க” என்ற இந்த வசனத்தை நான் பேசும் போது விஜய்யே சிரித்துவிட்டார் எனக் கூறியுள்ளார். அதேபோல், படப்பிடிப்புத் தளத்தில் விஜய் தேவையில்லாமல் யாரிடமும் பேசமாட்டாராம். யாராக இருந்தாலும் பேச வேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே வாய் திறப்பார். இல்லையென்றால் யாருக்கும் மரியாதை கொடுத்தெல்லாம் பேசிக்கொண்டு இருக்க மாட்டார் எனக் கூறியுள்ளார்.
அதேபோல், விஜய்யின் வெற்றிக்கு மிகப் பெரிய பலமே அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் தான். விஜய்யும் அதற்கேற்ப பயங்கரமாக உழைத்தார் என அனு மோகன் கூறியுள்ளார். முக்கியமாக தமிழ்நாட்டை கடந்து கேரளாவில் அங்குள்ள ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுவது விஜய் மட்டும் தான். மோகன்லால், மம்முட்டியை விடவும் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினியை விடவும் விஜய்க்கு செல்வாக்கு அதிகம் எனவும் அனுமோகன் தெரிவித்துள்ளார்.
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியது சர்ச்சையானது. அது அடங்கிய நிலையில், அடுத்து அனு மோகனும் தன் பங்கிற்கு கொளுத்திப் போட்டுள்ளார். இதனால் மீண்டும் ரஜினி – விஜய் ரசிகர்கள் இடையே சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து சூடு பிடித்துள்ளது.