ஆதிபுருஷ் படம் பார்க்க அனுமன் சீட்டில் அமர்ந்தவருக்கு அடி உதை
பிரபாஸ் நடிப்பில் ராமாயணத்தை தழுவி புராணப்படமாக ஆதிபுருஷ் திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. இயக்குனர் ஓம் ராவத் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதாவாக கிர்த்தி சனோன் நடிக்க, ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் நடித்துள்ளார். ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து படம் பார்க்க பல ரசிகர்களுக்கு இந்த படம் முழு திருப்தியை அளிக்கவில்லை என்றும், குறிப்பாக படத்தின் கிராபிக்ஸ் பணிகள் திருப்தியாக இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
அப்படி தியேட்டருக்கு வெளியே படம் பார்த்துவிட்டு வந்து படம் குறித்து நெகடிவ்வாக விமர்சனம் செய்த ரசிகர் ஒருவரை பிரபாஸ் ரசிகர்கள் தாக்கிய வீடியோ ஒன்றும் வெளியாவது. இதேபோல பல திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்க அனுமனுக்கும் ஒரு சீட்டை ஒதுக்கி அது காலியாகவே விடப்பட்டு இருந்ததை பல இடங்களில் பார்க்க முடிந்தது.
அப்படி ஒரு திரையரங்கில் அனுமனுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் ரசிகர் ஒருவர் படம் பார்க்க அமர்ந்ததால், அனுமனுக்காக அந்த இருக்கையை ரிசர்வ் செய்தவர்கள் கோபமாகி அவரை அந்த இருக்கையில் இருந்து எழுந்திருக்கும்படி கூறுவதும் அவரை தாக்க முற்படுவதும் என இன்னொரு வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.