ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த 14 மணி நேரத்திற்குள் 5 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே கத்ரா பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
முன்னதாக, லடாக்கின் லே மாவட்டத்திலிருந்து வடகிழக்கே 295 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 2.16 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உறுதியான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதிகாலை வேளையில் இந்த இந்த இரு நில நடுக்கங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.03 மணியளவில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மலைப்பாங்கான ரம்பன் மாவட்டத்தில் இருந்துள்ளது.
இதைத்தொடர்ந்து லடாக்கின் வடகிழக்கே 271 கி.மீ தொலைவில் நேற்று இரவு 9.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், நேற்று இரவு 9.55 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தோடா மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஏற்பட்ட ஏழாவது நிலநடுக்கம் இதுவாகும்.
இவ்வாறாக கடந்த 24 மணி நேரத்தில் அதாவது, நேற்று பிற்பகல் 2 மணி முதல் இன்று அதிகாலை வரையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.