திஸ்பூர்: அசாமில் பெய்து வரும் கனமழையால் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சுமார் 34,000-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 10-ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 31 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக விஸ்வநாத், தராங், லட்சுமிபூர், தாமல்பூர், உதல்குரி, திப்ரூகர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களை சேர்ந்த 34,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 210 ஹெக்டேர் ஏக்கர் பயிர்கள் நாசமாகி உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும் வெளியில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய அணை உடைந்தது: அசாமின் நாகோன் மாவட்டம், காம்பூரில் கபிலி ஆற்றின் குறுக்குபுதிதாக அணை கட்டப்பட்டு வந்தது. தற்போதைய கனமழையால் கபிலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை உடைந்துள்ளது.
2 இளைஞர்கள் உயிரிழப்பு: இதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். அசாமின் குவாஹாட்டி நகரில் கனமழையால் நேற்று சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். அந்த நகரில் சுமார் 360 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
குவாஹாட்டி மற்றும் வடக்குகுவாஹாட்டி இடையே படகுசேவை இயக்கப்பட்டு வருகிறது. பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் இரவில் படகு சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
கிளை நதிகளில் வெள்ளம்: பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் செல்கிறது. சில இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளனது. அந்த வகையில் சுமார் 77 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 11 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில் ஏராளமானோர் தஞ்சமடைந்து உள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு அசாமில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் வெள்ள நிலைமை மேலும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது.