கணக்கு டீச்சரை திருமணம் செய்யும் வேதாளம் வில்லன்
தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் கபீர் துஹான் சிங். அந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் றெக்க மற்றும் விஷாலின் ஆக்சன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதேசமயம் அதிக அளவிலான தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகிறார்.
சினிமாவில் நுழைந்த இந்த எட்டு வருடங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துவிட்ட கபீர் துஹான் சிங், நடிகர் டொவினோ தாமஸ் மூன்று வேடங்களில் தற்போது நடித்து வரும் வரலாற்று படமான அஜயன்டே ரெண்டாம் மோஷனம் என்கிற படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகிலும் நுழைந்துள்ளார்.. இந்த நிலையில் விரைவில் திருமண வாழ்க்கையிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார் கபீர் துஹான் சிங்
ஆம்.. இவரது திருமணம் வரும் ஜூன் 23ம் தேதி டில்லியில் நடைபெற இருக்கிறது. மணப்பெண் சீமா சஹால் ஹரியானாவை சேர்ந்தவர். பள்ளி ஒன்றில் கணித ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் பெரியோர்களால் பேசி முடிக்கப்பட்ட திருமணம். அதேசமயம் இந்த திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விதமாக எளிய முறையில் நடைபெற இருக்கிறதாம்.