அந்நியன், தசாவதாரம், வேட்டையாடு விளையாடு திரைப்படங்கள் மூலம் தனது கலைப் பயணத்தின் வேட்டையைத் தொடங்கி பர்ஃபி, தமாஷா, ஜக்கா ஜஸூஸ் திரைப்படங்கள் மூலம் இந்தித் திரையுலகிலும் தன்னை முழுமையாக நிலைநிறுத்தி இப்போது பொன்னியின் செல்வன் வரை அயராது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன். ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் `கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா’ நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே…
உங்களது வாழ்க்கை பயணம் குறித்துச் சொல்லுங்கள்?
“என் ஊர் பட்டுக்கோட்டை அருகிலுள்ள ‘பொய்யுண்டார் குடிகாடு’ என்கிற கிராமம். நான் இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் என் கிராமத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கை, நான் சந்தித்த மனிதர்கள்தான். எந்த வீட்டிற்கு எப்போது சென்றாலும் உணவு, மோர், காபி கிடைக்கும். இல்லாமை, இயலாமைதான் நம்மை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும். இயலாமையால்தான் நான் சென்னை வந்தடைந்தேன். எனது தந்தையார், தாயாரின் குடும்பம் பெரியது. சொல்லப்போனால், எங்களது குடும்பம் முதலில் வசதியான குடும்பம்தான். ஆனால் ஒரு பிரச்னை வந்தது. மோசமான நிகழ்வுகள் அரங்கேறின. பின்னொரு நாள் எனக்குத் திருமணமான பிறகு ஒரு நாள் நான் பழைய உணவைச் சாப்பிடலாம் என்று எடுத்து வைத்தேன். அது கெட்டுவிட்டது என எனது மனைவி கூறினார். நான் அது போன்ற உணவைத்தான் என் ஊரில் சாப்பிட்டுள்ளேன். இப்படி ஒரு நிலைமைக்கு என் தாயார்தான் காரணம்.”
ஏன் அந்த நிலைமை? அது என்ன பிரச்னை?
“ஒரு கொலை வழக்கினால் எனது குடும்பம் சிதைந்துவிட்டது. அதன் பிறகு என் தந்தையார் மனதளவில் சோகமடைந்து அதிகமாக மது அருந்தத் தொடங்கிவிட்டார். எனக்கு 13 வயது இருக்கும் போது எனது தந்தையார் அகால மரணமடைந்தார். அதன் பிறகு எனது சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு நான் என் தாயாருடன் வயல் வேலைக்குச் செல்வது தொடங்கிப் பல வேலைகள் செய்து, அதிகளவில் அவருக்கு உதவியாக இருப்பேன். எனது தந்தை இறந்த சில நாள்களிலேயே எனது தாயாரும் இறந்து விட்டார். அதன் பிறகு நானும் எனது சகோதரனும் அந்த ஊரில் சமாளித்து வாழ்ந்தோம். நாங்கள் இருவரும் இணைந்து வயல் வேலைகளைப் பார்த்துக் கொள்வோம். ஒரு நாள் சமைத்த உணவை இரண்டு நாள்களுக்கு வைத்துச் சாப்பிடுவோம். என் தாயாரின் மறைவுக்குப் பின் நமது வாழ்க்கை இது கிடையாது வேறொன்று என்பதை எண்ணித் தேடலில் இறங்கினேன். அப்போது எனக்குத் தமிழில் அதிக ஆர்வம் இருந்தது. எனக்கு 14 வயது இருக்கும் போது என் நண்பர்கள் எல்லாம் 60, 40 போன்ற வயதைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கற்றுக்கொடுத்துத்தான் நான் தேவாரம், திருவாசகம், திருக்குறள் ஆகியவற்றைப் பயின்றேன்.”
சிறு வயதில் இவ்வளவு கஷ்டங்களைச் சந்தித்துள்ளீர்கள். இது உங்களுக்குள் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியதா?
“என் தந்தையின் மறைவுக்குப் பின் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமென ஒரு நாள் முடிவுசெய்து வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டேன். தஞ்சாவூருக்குச் சென்று, ‘சின்ன தம்பி’, ‘சீரும் சிங்கங்கள்’ திரைப்படங்களைப் பார்த்தேன். கையிலிருந்த பணம் செலவாகிவிட்டது. அதன் பிறகு ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணி ரயில்வே பாலத்திற்குக் கீழே ஒளிந்து கொண்டேன். ஸ்டேஷன் மாஸ்டர் என்னை அங்கிருந்து அழைத்துச் சென்று பிரியாணி வாங்கிக் கொடுத்தார். நான் செய்ததெல்லாம் தவறு என்பதை அதன் பின்புதான் உணர்ந்தேன். அவர்கள் என்னிடம் காலையில் ஊருக்குக் கிளம்புமாறு கூறினார்கள். ஆனால் காலையில் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். 14 நாள்கள் அங்கிருந்தேன்.
அந்த 14 நாள்களில்தான் வாழ்க்கை, வலி பற்றி முழுமையாக அறிந்துகொண்டேன். அந்தச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒரு சிறுவனுக்கும் எனக்கும் பகையாகிவிட்டது. அவன் என்னை ஏதாவது செய்துவிடுவான் என மற்ற மாணவர்கள் என்னை எச்சரித்தார்கள். அதனால் அச்சமடைந்து எனது தாத்தாவிற்குக் கடிதம் எழுதினேன். அவர் வந்து என்னை அழைத்துச் சென்றார். அந்தச் சம்பவத்தினால் என்னை ஊரில் திருடன் என நினைத்தார்கள். திருட்டு ரயில் ஏறி மெட்ராஸ் செல்ல முயன்றான் என்ற வழக்கில்தான் என்னைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. சொல்லப்போனால், அப்போதுதான் எனக்கு இப்படி ஒரு வழி இருக்கிறது என்பதே தெரிய வந்தது. அதன் பின் என் தாயார் காலமாகிவிட்டார். திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தடைந்தேன்.”
சென்னை வாழ்க்கை உங்களுக்கு எவ்வாறு அமைந்தது?
“சென்னையில் எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இருந்தார். அவர் எனக்கு சில வாக்குறுதிகள் அளித்தார். எனக்குச் சட்டம் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அவரை நம்பி 7வது வரை பள்ளி முடித்த சான்றிதழ்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்னை வந்தடைந்தேன். முதலில் இரண்டு நாள்கள் என்னை நல்லபடியாகப் பார்த்துக் கொண்டார். அதன் பிறகு காரை சுத்தம் செய்ய வைத்தார். அன்றிரவு நான் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தேன். என்னை அடித்து தரையில் படுக்கச் சொன்னார். என்னைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தார். ‘இதுக்கு நான் என் ஊரிலேயே இருந்திருப்பேனே’ என எண்ணி ஊருக்குக் கிளம்ப முடிவு செய்தேன். என்னிடம் அப்போது 13 ரூபாய் இருந்தது. தஞ்சாவூர் வரை அதை வைத்துச் சென்றுவிடலாம். அங்கிருந்து என் ஊருக்கு 26 கிமீ. பரவாயில்லை, அவ்வளவு தூரமும் நடந்தே சென்றுவிடலாம் எனத் திட்டமிட்டேன். அன்றிரவு என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். ‘என் உதவி இல்லாம நீ சென்னையில எப்படி இருக்கப் போறன்னு பாக்குறேன்’ என என்னிடம் இருந்ததையெல்லாம் பறித்துக் கொண்டு துரத்திவிட்டார்.”
இந்தச் சம்பவம் நிகழும் போது உங்களின் வயது என்ன? வேறென்ன கடினங்களை நீங்கள் சந்தித்தீர்கள்?
“இதெல்லாம் நிகழும் போது எனக்கு வயது 16.அ தன் பிறகு ஒரு மாத கால வாழ்க்கை நரகத்தின் உச்சக்கட்டம் என்று சொல்லலாம். ஒரு லுங்கி, பனியனுடன் சுற்றினேன். அதோடு ஒரு நாள் கமல் சாரின் வீட்டிற்கு வெளியே உள்ள புளியமரத்தின் அடியில் உறங்கியிருக்கிறேன். கடற்கரையில் உறங்கியிருக்கிறேன். ஒரு நாள் பசி தாங்கிக் கொள்ள முடியாமல் அம்மன் கோயிலில் கூழ் அருந்தியிருக்கிறேன். அதன் பின்பு ஒரு நாள் மயங்கிவிட்டேன். அருகிலிருந்தவர்கள் என்னை எழுப்பி ஒரு டீ, பன் வாங்கிக் கொடுத்தார்கள். அதன் பின்பு ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை செய்யும் பொது அவ்வளவு பசி, எப்போது சாப்பிடுவோம் என்ற ஆவல் இருந்தது. அன்று சாப்பிட்ட உணவின் ருசி இன்று வரை என் நினைவில் இருக்கிறது.”
மேலும் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ரவி வர்மன். அந்த நேர்காணலைக் கீழே வீடியோவாகக் காணலாம்.