பற்றி எரியும் மேற்கு வங்கம்! தேர்தல் வன்முறையில் 6 பேர் பலி! மத்திய அமைச்சரின் கார் மீதும் தாக்குதல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு ஏற்பட்ட வன்முறையில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 6 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் இருக்கும் 75,000 இடங்களுக்கு ஜூலை 8ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், அங்கே பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. பஞ்சாயத்துத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேற்கு வங்கம்: இந்தத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 15ம் தேதி கடைசி நாளாகும். இதற்கிடையே வேட்புமனு தாக்கலின் கடைசி சில நாட்களில் அங்கே பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தோரைப் போட்டியிட அனுமதிக்காமல் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது அவர்களைத் தடுத்து நிறுத்தித் தாக்கியதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மாநிலத்தில் பல இடங்களில் ஒரு வித பதற்றமான சூழல் இருந்தது.

வேட்புமனு தாக்கல் சமயத்தில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் வன்முறைச் சம்பவங்களால் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் தேர்தல் காலங்களில் இதுபோன்ற வன்முறைச் சம்பவம் தொடர்கதையாக மாறி வருகிறது.

மத்திய அமைச்சர்: குறிப்பாக மேற்கு வங்க மாநிலம் கூச் பிஹார் மாவட்டத்தில் உள்ள சாஹேப்கஞ்ச் அலுவலகத்திற்கு வெளியே மத்திய இணை அமைச்சர் நிசித் பிரமாணிக்கின் கான்வாயை சிலர் தாக்கியுள்ளனர். அவரது கான்வாயை சிலர் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ உள்ளதாகவும் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நிசித் பிரமாணிக் மேலும் கூறுகையில், “எனது கான்வாயை தாக்கியது மட்டுமின்றி, பாஜக வேட்பாளர்களின் ஆவணங்களைப் பறித்தனர். போலீசார் முன்னிலையிலேயே பாஜகவினரைத் தாக்கினர். இருப்பினும், போலீசார் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை” என்றார். பாஜக வேட்பாளர்கள் மீது வன்முறையைத் தாக்குதல் நடந்து வருவதாகவும் பாஜக பெண் தொண்டர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் சாடியுள்ளார்.

மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கூறுகையில், “பாஜகவினர் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் இங்கே இருக்கும் சாதாரண மக்கள் குறித்து நினைத்துப் பாருங்கள். பிரமாணிக்கின் கார் மீதும் பெட்ரோல் வெடிகுண்டையும் வீசியுள்ளனர். இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடந்தபோது திரிணாமுல் அமைச்சர் உதயன் குஹா தனது ரவுடிகள் அங்கு தான் இருந்தார். மம்தா இதற்கெல்லாம் மக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்” என்றார்.

திரிணாமுல் தொண்டர் வன்முறை: இதற்கிடையே நேற்று சனிக்கிழமை அங்குள்ள மால்டாவில் ஒரு திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த தொண்டர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். உயிரிழந்த அந்த நபர் முஸ்தபா ஷேக் (62) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது மனைவி முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். இவர் அடித்தே கொலை செய்யப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “திரிணாமுல் சார்பில் போட்டியிட சீட் மறுக்கப்பட்ட சிலரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் சீட் கிடைக்காததால் காங்கிரஸில் இணைந்துள்ளனர். திடீரென நேற்று இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில். முஸ்தபாவை அடித்தே கொலை செய்துள்ளனர். இது ஒரு அரசியல் கொலையாகும்” என்றார்.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளைக் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேரடியாக ஒரு தரப்பு தான காரணம் என்று முன்முடிவுக்கு வரக் கூடாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.