சுப்பிரமணியன் சுவாமி என்றாலே சர்ச்சைக்குரிய நபர் என்று தான் அரசியல் களத்தில் நினைவுக்கு வரும். குறிப்பாக தமிழக அரசியலுடன் அதிகம் பொருத்தி பார்க்க முடியும். பூதாகரமாக கிளம்பிய பல வழக்குகளில் முன்னோடியாக இருந்து ஆட்டம் காண வைத்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர், 6 முறை எம்.பி, பாஜக உறுப்பினர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பாடப்பிரிவில் ஆய்வு பட்டம், பேராசிரியர், விராட் இந்துஸ்தான் சங்கத்தின் தலைவர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டவர்.
சர்ச்சைக்குரிய சுப்பிரமணியன் சுவாமி
பாஜகவில் இருந்து கொண்டு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என நம்பர் 1, நம்பர் 2 முதல் கீழ்மட்டம் வரை ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. பளிச்சென்று விஷயத்தை போட்டு உடைத்து வம்பை விலைக்கு வாங்கி கொள்வார். இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் பதிவு ஒன்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், மணிப்பூரில் ஆளும் பாஜக அரசை அகற்றுங்கள். உடனே இந்திய சட்டப்பிரிவு 356ன் கீழ் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மணிப்பூர் கலவரம்
ஏனெனில் மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து வன்முறை, பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தல், கலவரம், உயிரிழப்புகள் என அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது ராணுவம், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இருப்பினும் அரசியல்வாதிகளின் வீடுகளை தாக்குதல், தீவைத்தல் போன்ற சம்பவங்கள் நடந்து பதற்றத்தை கூட்டி வருகின்றன.
குடியரசுத் தலைவர் ஆட்சி
மேலும் கலவரக்காரர்கள், பாதுகாப்பு படையினர் இடையில் மோதல் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தார். இன்னும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. மணிப்பூரில் நடப்பது இனப் படுகொலை என அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். எனவே தான் மணிப்பூரில் நடக்கும் பாஜக ஆட்சியை கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் புகார்
அடுத்து ஒரு விஷயத்தை பதிவிட்டுள்ளார். அதுதான் ஹைலைட். பாஜவின் மாஸ்டர் மைண்ட், நம்பர் 2 என்றெல்லாம் அழைக்கப்படும் அமித் ஷாவை விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்து நீண்ட போராட்டத்தை கையிலெடுத்தனர். இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் விளையாட்டு துறை அமைச்சகத்திற்கு அமித் ஷாவை அனுப்பி வைக்கலாம் என்று கொளுத்தி போட்டுள்ளார்.
விளையாட்டுத் துறை
இவர் மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளர், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து வருகிறார். எனவே தந்தையும், மகனும் ஒரே துறையில் இருங்கள் என்பது போல் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். இப்படி பாஜகவிற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் சுப்பிரமணியன் சுவாமியை, எப்படித் தான் அக்கட்சியில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.