தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இதன் காரணமாக விசாரணை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பைபாஸ் சர்ஜரி செய்ய ஏற்பாடு
மருத்துவமனையில் வைத்தே விசாரிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவரது உடல்நிலை எந்த அளவிற்கு ஒத்துழைக்கும் என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 18) காலை விடிந்ததும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை காலை பைபாஸ் சர்ஜரி செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சிறப்பு மருத்துவர்கள் குழு
இவருடைய இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதால் பைபாஸ் சர்ஜரி செய்யப்படவுள்ளது கவனிக்கத்தக்கது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராம் தலைமையிலான மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை செய்யவுள்ளனர். மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவரின் மருத்துவ சிகிச்சை விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அரசின் கடமை.
தமிழக அரசின் கடமை
முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போதும் மருத்துவ அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. இதேபோல் தான் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அவரை கண்காணிக்கும் மருத்துவர்கள் குழு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இலாகா இல்லாத அமைச்சர்
அந்த வகையில் பைபாஸ் சர்ஜரி தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து வருகிறார். வழக்கு விசாரணையில் இருந்து விடுபட்டு வெளியே வரும் போது, மீண்டும் குறிப்பிட்ட துறைகள் ஒதுக்கப்படும் எனக் கூறுகின்றனர்.
விசாரணை விவரங்கள்
அதேசமயம் வழக்கின் திசை எவ்வாறு நகரப் போகிறது? விசாரணையில் சரியான முறையில் நடக்குமா? அமைச்சர் செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு வழங்குவாரா? விசாரணையில் என்ன சொல்லப் போகிறார்? போன்றவற்றை பொறுத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் அமையும். இதை ஆவலுடன் தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.