திரைப்பட நடிகர் வெங்கடேஷை காரில் கடத்தி, கால்களை அடித்து உடைத்த வழக்கில் அவர் மனைவி, பா.ஜ.க நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை தபால் தந்தி நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ். இவர் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர்.
நடிகர் வெங்கடேஷ் டி.வி நிகழ்ச்சிகள், சினிமாவில் நடிப்பதோடு மதுரையில் விளம்பர ஏஜென்சி நடத்தி, அதன் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் செய்து வருகிறார். கூடவே, சமூக வலைதளத்தில் பெர்ஃபார்மன்ஸ் செய்தும், அரசியல் கருத்துகளையும் பதிவிட்டு வந்தார்.
சமீபத்தில் பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்ததால், பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் அவரை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான், அவரை ஒரு கும்பல் கடந்த 15-ம் தேதி கடத்தி காலில் கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றிருக்கிறது. அங்கு ஒரு காவித்துண்டையும் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது அந்தக் கும்பல்.
வெங்கடேஷின் அலறல் சத்தம் கேட்டு, அந்தப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தல்லாகுளம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க, உடனே வந்தவர்கள் வெங்கடேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினரிடம் விசாரித்தபோது, “வெங்கடேஷுக்கு கோவையைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கிறது. இது அவரின் மனைவி பானுமதிக்குத் தெரியவர, அவர் வெங்கடேஷைக் கண்டித்திருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது
இதற்கிடையே, தன் மனைவியை விவாகரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் வெங்கடேஷ். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இருவரும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்திருக்கின்றனர்.
கணவர் தன்னுடன் மட்டுமே வாழவேண்டுமென என முடிவுசெய்த பானுமதி, தன் கார் டிரைவர் மோகனிடம், `வெங்கடேஷின் காலை உடைத்து, வீட்டிலேயே இருக்கும் வகையில் செய்ய வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட பா.ஜ.க-வில் நிர்வாகியாக இருக்கும் உறவினர் வைரமுத்துவிடம், கணவர் குறித்துப் பேசியிருக்கிறார் பானுமதி. பா.ஜ.க-வை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட வெங்கடேஷ் மீது ஏற்கெனவே கோபத்திலிருந்த வைரமுத்து, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு கடந்த 15-ம் தேதி இரவு டிரைவர் மோகனுடன் திட்டமிட்டு, காரில் வரும்போது வெங்கடேஷைக் கடத்தி நாகனாகுளம் கண்மாய் பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
அங்கு காத்திருந்த ராஜ்குமார், மலைச்சாமி, ஆனந்தராஜ், வைரமுத்து ஆகியோர் வெங்கடேஷின் இரு கால்களையும் கட்டையால் தாக்கிவிட்டுக் கிளம்பியிருக்கின்றனர்.
வெங்கடேஷின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தல்லாகுளம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தவுடன், போலீஸார் சென்று வெங்கடேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
இந்த நிலையில் வெங்கடேஷின் மனைவி பானுமதி, ராஜ்குமார், மோகன், வைரமுத்து, மலைச்சாமி, ஆனந்தராஜ் ஆகிய 6 பேரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். தலைமறைவாக இருக்கும் துளசி என்பவரைத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் மதுரையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது