பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் செறுகுருத்தி கலாமண்டலத்தில், இஸ்லாமிய சிறுமி கதகளி நடன வகுப்பில் சேர்ந்துள்ளார்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் செறுதுருத்தியை மையமாக கொண்டு செயல்படும் கல்விக்கூடம் கலாமண்டலம். கல்வியுடன் கலைகளும் கற்பிக்கும் இங்கு, கேரள பாரம்பரிய நடனமான கதகளி வகுப்புகள் நடக்கின்றன. கடந்த, 90 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கதகளி வகுப்பில், 2020 – -21 கல்வி ஆண்டு முதல் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெண்களுக்கான வகுப்பு துவங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல் முறையாக இஸ்லாமிய சிறுமி கதகளி நடனம் கற்பதற்காக இங்கு சேர்ந்துள்ளார். கொல்லம் மாவட்டம் அஞ்சலையை சேர்ந்த நிஜாமின் மகள் சாப்ரி, 14, ஹிஜாப் அணிந்து, கலாமண்டலத்தில் கதகளி கற்பதற்காக எட்டாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். பிரபல கதகளி நடன மேதை கலாமண்டம் கோபி, நடன முத்திரைகளை கற்பித்து, இந்த கல்வி ஆண்டு வகுப்பை துவக்கி வைத்தார்.
சாப்ரியின் தந்தை நிஜாம் கூறியதாவது: கலாமண்டலம் கதகளி ஆசான் கோபி ஆசியால், கதகளி நடனம் கற்க முடிந்தது. சாப்ரினுக்கு கதகளி நடனம் ரொம்ப பிடிக்கும். வீட்டின் அருகில் உள்ள மகாதேவர் கோவில் விழாவில், கதகளி நடன நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பாள்.
அரசு மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்த சாப்ரினின் விருப்பப்படி, கலாமண்டலத்தில் சேர்த்தேன். சமுதாயத்தின் எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால், இது ஒரு கேரள கலாசார கலை. என் மகளின் விருப்பம் தான் எனக்கு முக்கியம். இங்கு அவளுக்கு முதுகலை பட்ட படிப்பு வரை படிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
கலாமண்டலம் கதகளி நடன தலைமை ஆசிரியர் ரவிக்குமார் கூறுகையில், ‘கதகளி வகுப்பில், தற்போது, 11 மாணவிகள் உள்ளனர். இதில் மூன்று பேர் எட்டாம் வகுப்பும், நான்கு பேர் ஒன்பதாம் வகுப்பும், நான்கு பேர் பத்தாம் வகுப்பும் படிக்கின்றனர். இந்த ஆண்டு எட்டாம் வகுப்பில் உள்ள ஆறு இடங்களுக்கு, 20 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கதகளி நடனம் கற்க விரும்புவோர் அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement