சென்னை: Fathers day (தந்தையர் தினம்) தந்தையர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் அட்லீக்கு ப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
குறும்படம் எடுத்து அதன் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இணைந்தார் அட்லீ. நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கரின் ஆஸ்தான சீடர்களில் ஒருவர். அதனையடுத்து ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். முதல் படமே மெகா ஹிட்டானது. படம் மௌனராகம் போல் இருந்தாலும் அட்லீயின் மேக்கிங் பரவலாக பேசப்பட்டது.
விஜய்யுடன் பயணம்: அதனைத் தொடர்ந்து தெறி படத்தை இயக்கினார். இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றினார். படம் சூப்பர் ஹிட்டானாலும் பல காட்சிகளும் ஏன் படமே சத்ரியன் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்காக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இதில் பிகில் படம் தோல்வியை சந்தித்தது.
ஹிந்தியில் அட்லீ: படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கிறார் அட்லீ என்ற விமர்சனம் எழுந்தாலும் அவர் இயக்கும் படங்கள் வசூலை அள்ளிவருகின்றன. தற்போது அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிவருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருக்கிறார். இந்தப் படமும் சில தமிழ் படங்களின் காப்பிதான் என இப்போதே பேச்சு எழுந்திருக்கிறது.
மும்பையில் செட்டில் ஆன அட்லீ: இதற்கிடையே அட்லீ மும்பையில் 38 கோடி ரூபாய்க்கு சொகுசு ஃப்ளாட் வாங்கியிருப்பதாகவும், அதற்கான இண்டிரீயர் டிசைனை ஷாருக்கானின் மனைவி கௌரிதான் கவனித்துக்கொள்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதனையடுத்து, ஜவான் படம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கும் அட்லீ அடுத்தடுத்து ஹிந்தி படங்களை இயக்கும் ஆசையில் இருக்கிறார்.
அதனால்தான் மும்பையில் வீடு வாங்கியிருக்கிறார். எனவே இனி அட்லீ தமிழில் குறைவான படங்களையே இயக்குவார் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இதற்கிடையே அட்லீக்கும், ப்ரியாவுக்கும் அண்மையில் மகன் பிறந்தார். அவருக்கு மீர் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
தந்தையர் தினம்: இந்நிலையில் இன்று தந்தையர் தினம் கொண்டாடுப்படுவதால் ப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் அட்லீக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்திருக்கும் வாழ்த்தில், “தந்தையர் தின வாழ்த்துகள் டாடா.. மீர், பெக்கி மற்றும் அம்மா உங்களை அதிகம் நேசிக்கின்றோம். நீங்கள் இந்த உலகத்திலே சிறந்த அப்பா” என குறிப்பிட்டிருக்கிறார். அந்த ட்வீட் இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.