விருதுநகர்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்க இலவச சீருடை தயாரிக்கும் பணிகள், விருதுநகரில் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்வித் துறை சார்பில் இலவசமாக ஆண்டுதோறும் 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, 2022-23-ம் ஆண்டில் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு, முதல் கட்டமாக ரூ.100 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட் டுள்ளது.
விருதுநகர், மதுரை, தேனி, ஈரோடு மாவட்டங்களில் இலவச சீருடை துணிகள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் கைத்தறி துறை சார்பில், 70 சதவீதம் இலவச சீருடைக்கான துணிகள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் முதல் வரும் செப்டம்பர் வரை 64,18,138 மீட்டர் துணிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள 29 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 4,253 பெடல் தறிகளில் இலவச சீருடைக்கான துணி தயாரிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கைத்தறி துறை அலுவலர்கள் கூறியதாவது: முதல் கட்டமாக சீருடைகள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. தற்போது 2-ம் கட்டமாக இலவச சீருடை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெசவாளர்களுக்கு மீட்டர் ஒன்றுக்கு கூலியாக ரூ.12.73 வழங்கப்படுகிறது. நேற்று வரை 33,13,141 மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அரசால் கொள்முதல் செய்யப்படும் சீருடை துணிகள் சமூக நலத்துறை மூலம் பெறப்பட்டு சீருடை தைக்கும் பணி மேற்கொள்ளப்படும். பின்னர் பள்ளி கல்வித்துறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.
தற்போது மாவட்டத்தில் பெடல் தறிகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை துணி தயாரிப்பு பணிகளும், சமூக நலத்துறை சார்பில் சீருடை தைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, அடுத்த இரு மாதங்களில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.