நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கிய நிகழ்வுதான் நேற்று முழுவதும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தது. குறிப்பாக விஜய் பேசிய சில விஷயங்களும் வைரலானது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், “இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யக் காரணமே சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம்தான். ‘காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது” என்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ பட வசனத்தை விஜய் பேசியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறனிடம், ‘அசுரன்’ படத்தில் இடம்பெற்ற வசனத்தை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் பேசியிருந்தார். இதனை எவ்வளவு முக்கியமானதாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த வெற்றிமாறன், “ஒரு சினிமாவில் நாம் சொல்கின்ற ஒரு விஷயம், சமூகத்துல மிக முக்கியமான ஒரு நபரிடம் போய் சென்றடையும் பொழுது அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகத்தான் நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் போன்றோரைப் படிக்க வேண்டும் என்று விஜய் பேசியிருந்தார். இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “மேடையில் அவர் சொன்னது, அனைவரும் அவர்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அம்பேத்கர், பெரியார், காமராஜர் உடன் சேர்ந்து அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.