அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இன்றைக்கு தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்கிற அபாயகரமான நிலையை தி.மு.க அரசு உருவாக்கியிருக்கிறது.
மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்குப் பாதுகாப்பு இல்லை. இந்த அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம். ஆனால், அரசு ஊழியர்கள் ஓர் அரசின் நிரந்தரத் தூண்கள. அரசு ஊழியர்கள் ஓய்வு வயது வரை சேவை செய்யக்கூடிய வாய்ப்பைப் பெற்றவர்கள். ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மோதிக்கொண்டபோது, சமரசம் செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் கீழே தள்ளப்பட்டிருக்கிறார். இது, இந்த அரசின் அவல நிலையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.
ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியை அலுவலகத்தில் வைத்தே மணல் மாஃபியா கும்பல் படுகொலைசெய்தது. சேலம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியை மணல் கொள்ளைக் கும்பல் நடுரோட்டில் துரத்திக் கொலைசெய்ய முயன்றது.
கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் பங்கேற்ற பேராசியர் அன்பழகன் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில், பாதுகாப்புக்காக சென்ற இளம்பெண் காவலருக்கு தி.மு.க-வைச் சேர்ந்த குண்டர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.
இந்த நிலையைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. திருச்சியில் அமைச்சர் நேரு- சிவா எம்.பி-யின் ஆதரவாளர்கள் மோதலில், பெண் காவலரைத் தாக்கியதில் கை முறிந்தது. அதேபோல் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்குச் சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிமீது தி.மு.க-வினர் தாக்குதல் நடத்தியதில், கைமுறிவு ஏற்பட்டது.
காவல்துறையினருக்கு, வருவாய்த்துறையினருக்கு, உள்ளாட்சித் துறையினருக்கு, வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இப்படியே சென்றால் சாதாரண மக்களுக்கு எப்படி இவர்களால் பாதுகாப்பு கொடுக்க முடியும்?
தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 1,989 படுகொலைகள் நடந்திருக்கின்றன. கடந்தாண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 3,511 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.
நேர்மையாகப் பணியாற்றியதற்காக எடப்பாடியார் ஆட்சியில் விருது பெற்ற விருதுநகர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரி துரை பிரிதிவிராஜ், தி.மு.க ஆட்சியில் நேர்மையாகப் பணி செய்ய முடியவில்லை என்று ராஜினாமா செய்திருக்கிறார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அரசு ஊழியர்களை ஏமாற்றியிருக்கிறீர்கள். தற்போது அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறீர்கள். அவர்கள் எங்கே போய் முறையிட முடியும்… இந்த இரண்டாண்டுக்கால ஆட்சியில் தி.மு.க அரசுமீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்” என்று கூறினார்.