இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை கொண்டுவர வேண்டும்; மியான்மரில் இருந்து வந்து குடியேறி குக்கி சின் வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும் என புதிய போராட்டத்தை மைத்தேயி இனக்குழு பெண்கள் நடத்தி உள்ளதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையினராக சமவெளி பகுதிகளில் வசிப்பவர்கள் மைத்தேயி மக்கள். மலைப் பகுதிகளில் வசிக்கும் நாகா, குக்கிகள் பழங்குடிகள் பட்டியலில் உள்ளனர். மணிப்பூரின் பூர்வகுடிகளான மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க முனைந்தனர். ஆனால் குக்கிகள் இதனை கடுமையாக எதிர்த்து வன்முறையில் இறங்கினர்.
இதனைத் தொடர்ந்து குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே ஆயுத மோதல் வெடித்துள்ளது. இருதரப்பிலும் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். குக்கிகளின் பல்லாயிரம் பேர் மிசோரம் மாநிலத்துக்கு அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர்.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசு, பாஜக தலைவர்கள் மீது மைத்தேயி- குக்கி மக்கள் கோபம் திரும்பி இருக்கிறது. பாஜக தலைவர்கள் வீடுகள், அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மாநில அமைச்சர், மத்திய அமைச்சர்களின் வீடுகளும் தப்பவில்லை.
இதனிடையே மைத்தேயி இனப் பெண்கள், குக்கி சின் எனப்படும் மியான்மரில் இருந்து வந்து குடியேறி குக்கிகளை மாநிலத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்; மணிப்பூர் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நூற்றுக்கணக்கான பெண்கள், தீப்பந்தங்களுடன் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். இதனால் மணிப்பூரில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.