முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் உத்தரப்பிரதேசத்தில் இந்துக் கும்பல் ஒன்று, திருடியதாகச் சந்தேகத்தின்பேரில் இஸ்லாமியத் தொழிலாளியின் தலையைப் பாதி மொட்டையடித்து மரத்தில் கட்டிவைத்து `ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுமாறு சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகியிருக்கிறது.
இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவின அந்த வீடியோவில், இந்துக்கள் சிலர் இஸ்லாமிய தொழிலாளியைப் பிடித்து வைத்து தலையில் பாதியளவு மொட்டையடித்து, மரத்தில் கட்டிவைத்து `ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுமாறு கொடுமைபடுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இஸ்லாமியத் தொழிலாளியின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், இதில் நடவடிக்கை எடுத்த போலீஸார், அந்த வீடியோவில் இஸ்லாமிய நபரைச் சித்ரவதை செய்த மூன்று பேரில் இரண்டு பேரைக் கைதுசெய்தனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக ஊடகத்திடம் பேசிய பாதிக்கப்பட்ட இஸ்லாமியத் தொழிலாளி சாஹில் என்பவரின் தந்தை ஷகீல், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தன் மகன் சாஹில் சிறையிலடைக்கப்பட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுடன் சமரசம் செய்துகொள்ளுமாறு போலீஸார் மிரட்டியதாகவும் கூறினார்.
இத்தகைய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி, “காவல்துறையினரின் அனுதாபத்தைப் பாருங்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்படுவதற்குப் பதிலாக, சாஹிலை சிறைக்கு அனுப்பினார்கள். அநீதிக்கு எதிரான எங்களின் மனுக்களை நாங்கள் எங்கே எடுத்துச் செல்வது?” என உத்தரப்பிரதேச காவல்துறையைக் கேள்வியெழுப்பினார்.
பின்னர் இதுகுறித்துப் பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர நாத் திவாரி, “வீடியோவைப் பார்த்த பிறகு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டு, இரண்டு குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர்” என்றார்.