சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) தனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அனுப்பிய மெசேஜை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு புதிய பாதை மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பார்த்திபன். முதல் படத்திலேயே கதாநாயகனாகவும் அறிமுகமானார். இவருக்கு ஜோடி சீதா நடித்தார். மேலும் அந்தப் படத்தில் மனோரமா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படமும் தேசிய விருதை பெற்றது. அன்றிலிருந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார் பார்த்திபன்.
வித்தியாசம் காட்டும் பார்த்திபன்: படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுவதில் பார்த்திபன் வல்லவர். இவர் இயக்கிய குடைக்குள் மழை, ஹவுஸ்புல், உள்ளே வெளியே உள்ளிட்ட பல படங்கள் அந்த வகையை சேர்ந்தவை. இருப்பினும் இயக்குநராக அவர் இயக்கிய பல படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாதவை. இதனால் சில காலம் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த பார்த்திபன் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
நடிப்பில் மிரட்டிய பார்த்திபன்: நடிப்பில் கவனம் செலுத்த பார்த்திபனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் . செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வெளியான அந்தப் படத்தில் சோழ மன்னர் கதாபாத்திரத்தில் தோன்றிய பார்த்திபனை பார்த்து அனைவருமே மிரண்டுதான் போனார்கள். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்திருந்தார் பார்த்திபன். சமீபத்தில்கூட பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கதையே இல்லாமல் ஒரு படம்: இந்தச் சூழலில் சில காலம் இயக்கத்துக்கு முழுக்கு போட்டிருந்த பார்த்திபன் இயக்குநராக கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படமானது கதையே இல்லாமல் உருவான படம். அஞ்சான் படத்தோடு ரிலீஸான கதை திரைக்கதை வசனம் இயக்கம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் கொடுத்த உற்சாகத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது.
ஒத்த செருப்பில் கலக்கிய பார்த்திபன்: இதனையடுத்து ஒத்த செருப்பு படத்தை இயக்கி நடித்தார் பார்த்திபன். இந்தப் படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். ஒரே ஆள் திரையில் தோன்றினாலும் படத்தை சுவாரசியம் குறையாமல் நகர்த்தி சென்றிருந்தது பார்த்திபனின் இயக்கமும், திரைக்கதையும். இந்தப் படம் தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிக்கொண்டிருக்கிறது.
சிங்கிள் ஷாட் படம்: ஒத்த செருப்புக்கு அடுத்ததாக இரவின் நிழல் படத்தை இயக்கினார் பார்த்திபன். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதன் சிறப்பு என்னவென்றால் இந்தப் படம் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டது. ஆனால் படம் போதிய அளவிலான வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து அவர் 52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு என்ற புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
ட்ராப் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்: இந்நிலையில் பார்த்திபன் ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு அனுப்பிய மெசேஜை பகிர்ந்திருக்கிறார் பார்த்திபன். ரஹ்மான் அனுப்பிய மெசேஜில், ‘பர்சனல் மற்றும் ப்ரொஃபஸ்னல் என அதிக வேலைகள் பாக்கி இருக்கின்றன. அதனால் இந்த முறை உங்கள் ப்ரொஜெக்டை விடுகிறேன். உங்கள் கதையை கேட்க ஆர்வமாக இருந்தேன். நீங்கள் சிறந்த படைப்பாளி. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என குறிப்பிட்டௌள்ளது.