சென்னை:
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஆபாச பேச்சால் கோபம் அடைந்த குஷ்பு இன்று செய்தியாளர்கள் மத்தியில் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவைச் சேர்ந்த பிரபல பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவரது பேச்சுகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. அண்மையில் கூட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சில வாரங்களுக்கு முன்புதான் மீண்டும் திமுகவில் இணைந்தார்.
இதனிடையே, நேற்று நடந்த திமுக கூட்டத்தில் கலந்துகொண்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என். ரவியை தரக்குறைவாக பேசினார். மேலும், பாஜக நிர்வாகி குஷ்புவையும் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இவரது பேச்சு சமூக வலைதளங்களில் தீயாக பரவி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குஷ்பு தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மிகவும் கோபத்துடன் அவர் காணப்பட்டார். அவர் கூறியதாவது:
நான் இங்கே வந்திருப்பது கட்சி ரீதியாக இல்லை. பெண் என்ற முறையில் வந்து பேசிக் கொண்டிருக்கிறேன். எந்த துறையாக இருந்தாலும் பெண்களை கேவலமாக பேசாதீங்க. அப்படி பேசினால் நான் ஆக்சன் எடுப்பேன். உடனே சிலர் கேட்பாங்க.. ஏன் உங்க கட்சியில் யாரும் பெண்களை தரக்குறைவா பேசலையானு. யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் பெண்களை தவறாக பேசினால் நான் வந்து நிற்பேன்.
பெண்களை கேவலமாக பேசுவதை நிறுத்துங்க. இன்னைக்கு கொந்தளிச்சு போய் நான் இங்க உட்கார்ந்துட்டு இருக்கேன். நேராகவே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். அந்த தைரியம் எனக்கு இருக்கு. பெண்களுக்கு நான் பொதுவாக சொல்கிறேன். யார் உங்களை கேவலமாக பேசினாலும் பொறுத்துக் கொண்டு இருக்காதீங்க. அரசியல்னு இல்ல.. எல்லா துறையிலும் இருக்கும் பெண்களுக்குதான் சொல்றேன்.
இன்னைக்கு நான் வலியோட உட்கார்ந்துட்டு இருக்கேன். இன்னைக்கு நான் இங்க வந்து பேசலைனா, என் மகள்களுக்கு எப்படி நான் முன்னுதராணமாக இருக்க முடியும்? ஒருத்தர் உன்னை பத்தி இப்படி பேசுறாரே.. நீ ஏன் அமைதியா இருந்தனு என் பொண்ணுங்க என்னை கேட்கக்கூடாது.
அப்புறம், நாளைக்கு அவங்கள பத்தி யாரும் தப்பா பேசினாலும் அவங்களும் அமைதியாகதான் இருக்கணும்னு நினைச்சிக்குவாங்க. என் பொண்ணுங்களுக்கா மட்டும் இல்ல.. எல்லா பெண்களுக்காகவும் தான் நான் பேசிட்டு இருக்கேன். (கண்ணீர் விடுகிறார்) ஒரு தாய்க்கு பொறந்தவன் தானே அவன். எப்படி அவன் என்னை இப்படி பேசலாம். அவனுக்கு புத்தி எங்க போச்சு. இவ்வாறு குஷ்பு பேசினார்.