சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே தரமற்ற முறையில் 3 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. மேலும் அவை பயன்பாட்டுக்கு வராமலேயே சேதமடைந்தன.
மாரந்தை ஊராட்சியில் மாரந்தை, மேலச்சேத்தூர், கோலாந்தி ஆகிய 3 கிராமங்களில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் தலா ரூ.5.25 லட்சத்தில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. இந்த வளாகங்கள் கட்டும்போதே தரமின்றி கட்டுவதாக புகார் எழுந்தது.
ஆனால் ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கோலாந்தியை தவிர்த்து மற்ற 2 சுகாதார வளாகங்களுக்கு தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டன. தரமில்லாத குழாய்களால் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பணிகள் முடிந்து ஓராண்டாகியும் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. தற்போது மேற்கூரையும், சுவரும் சேதமடைந்து வருகின்றன. இதனால் ரூ.15.75 லட்சம் அரசு பணம் வீணாகியுள்ளது.
இதையடுத்து 3 சுகாதார வளாகங்களையும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஊராட்சித் தலைவர் திருவாசகத்திடம் கேட்டபோது, ”தண்ணீர் விட்டாலே குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது” என்று கூறினார்.