அய்யோ பார்க்க கூட முடியலையே! கோரமண்டல் ரயில் டிரைவரின் பரிதாப நிலை! கண்ணீரில் குடும்பம்! சோகம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் 290 பேர் பலியாகினர். இந்தியாவில் மிகவும் மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது பதிவாகி உள்ள நிலையில் தான் கோரமண்டல எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய பைலட் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய சோகமான தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கடந்த 2ம் தேதி கோரமண்டல எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஒடிசா மாநிலம் பஹானகா என்ற இடத்தில் சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது.

இதையடுத்து கோரமண்டல் ரயில் பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் விழுந்த நிலையில் அதில் வந்த பெங்களூர்-ஹவுரா ரயில் மோதி தடம்புரண்டது. ஒரேநாளில் அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கியது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.

இந்த விபத்தில் 290 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காயம், படுகாயம் என 700க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இன்னும் சிலரது உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் மூழ்கடித்தது. ரயில்வே இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட குழப்பம் தான் ரயில் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய பைலட் மற்றும் அவரது குடும்பத்தின் பரிதாப நிலை பற்றிய தகவல் வெளியாகி அனைவரையும் கவலையடைய செய்துள்ளது.

அதாவது விபத்து நடந்தபோது ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் ரயிலை இயக்கிய லோகோ பைலட்டின்(டிரைவர்) பெயர் குணாநிதி மொகந்தி. இவர் ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே உள்ள நஹர்பாடா என்ற பகுதியை சேர்ந்தவர். இந் நஹர்பாடா பகுதி என்பது கட்டாக்கில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதில் குணாநிதி மொகந்தி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.

இதையடுத்து அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. மேலும் பல இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தன. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரயில்வே தரப்பிலும் அவரது குடும்பத்துக்கு எந்த தகவலும் பகிரப்படவில்லை என சொல்லப்படுகிறது.

Odisha Train Accident: Injured driver Gunanidhi Mohantys family Says not allowed to Meet Him

இதனால் குணாநிதி மொகந்தியின் உடல்நலம் எப்படி உள்ளது? என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவிக்கின்றனர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் குணாநிதி மொகந்தி எங்கிருக்கிறார்? என்பது பற்றி கூட குடும்பத்தினருக்கு தகவல் சொல்லப்பபடவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி லோகோ பைலட் குணாநிதி மொகந்தியின் அண்ணன் ரஞ்சித் மொகந்தி கூறுகையில், ‛‛ என் சகோதரர் பற்றி யாரும் எங்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. அவர் இன்னும் மருத்துவமனையில் தான் இருக்கிறார் என நினைக்கிறேன். இருப்பினும் அதுபற்றி உறுதியாக எனக்கு தெரியவில்லை” என வருத்தத்தை தெரிவித்தார்.

இதையடுத்து இன்னொரு சகோதரர் சஞ்சய் மொகந்தி கூறுகையில், ‛‛விபத்து நடந்த பிறகு அடுத்த சில நாட்களில் நான் என் சகோதரரை பார்க்க சென்றிருந்தேன். பலத்த காயமடைந்த அவர் பேச முடியாமல் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதன்பிறகு அவரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை” என வருந்தினார்.

இதுபற்றி குணாநிதி மொகந்தியின் 80 வயது நிரம்பிய தந்தை கூறுகையில், ‛‛விபத்துக்கு என் மகன்தான் காரணம் என கிராமத்தில் உள்ள அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் அவன் கடந்த 27 ஆண்டுகளாக ரயில்களை இயக்கி வருகிறார். ஒருபோதும் தவறு செய்தது இல்லை. என் மகனிடம் நான் இன்னும் பேசவில்லை. அப்படி இருக்கும்போது சம்பவத்தின்போது என்ன நடந்தது என்பது எப்படி எனக்கு தெரியும்? அவன் வீட்டுக்கு வர வேண்டும். அதற்காக தான் நான் காத்திருக்கிறேன்” என்றார்.

இதுபற்றி கிழக்கு கடற்கரை ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி விகாஸ் குமார் கூறுகையில், ‛‛உடல்நலம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயமாகும். அதுபற்றி நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது. இந்த விபத்து குறித்து சிஆர்எஸ் மற்றும் சிபிஐ சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை நடப்பதால் தற்போது விபத்து குறித்தும் நாங்கள் எதுவும் பேச முடியாது” எனக்கூறினார். இருப்பினும் கோரமண்டல் ரயிலை இயக்கி படுகாயமடைந்து மறுபிறவி எடுத்துள்ள டிரைவர் குணாநிதி மொகந்தியை பார்க்க முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.