கைது செஞ்சுட்டா மட்டும் விட்ருவோமோ.. இனிதான் ஆட்டமே இருக்கு.. குஷ்பு அதிரடி!

சென்னை:
குஷ்புவை ஆபாசமாக பேசியதாக கூறி திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள குஷ்பு, கைது செய்துவிட்டதால் எல்லாம் முடிந்துவிட்டதாக அர்த்தம் கிடையாது எனக் கூறியுள்ளார்.

திமுகவைச் சேர்ந்த பிரபல பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவரது பேச்சுகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. அண்மையில் கூட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். சில வாரங்களுக்கு முன்புதான் மீண்டும் அவர் திமுகவில் இணைந்தார்.

இதனிடையே, நேற்று நடந்த திமுக கூட்டத்தில் கலந்துகொண்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என். ரவியை தரக்குறைவாக பேசினார். மேலும், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவையும் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இவரது பேச்சு சமூக வலைதளங்களில் தீயாக பரவி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.

கருணாநிதிக்கு தான் அசிங்கம்:
இதுதொடர்பாக செய்தியாளர்களை குஷ்பு இன்று சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், “பெண்கள் பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கருணாநிதி இருந்த போது திமுக இப்படி கிடையாது பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு கருணாநிதியை தான் திமுகவினர் அசிங்கபடுத்தி வருகிறார்கள்.

அதிரடி கைது:
அப்படி சிலர் தரம் கெட்டு பேசுவதை நான்கு பேர் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நான் பேசுவதால், என் வீட்டின் மீது திமுகவினர் கல்வீசினாலும் எனக்கு கவலையில்லை. திமுகவில் இப்படிப்பட்ட ஆட்களைதான் தீனி கொடுத்து வளர்க்கிறார்கள். நாளை இதுதொடர்பாக புகார் அளிக்க இருக்கிறேன்” என்றார்.

இந்நிலையில், குஷ்பு இவ்வாறு பேட்டி கொடுத்த அடுத்த அரைமணிநேரத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதன் பிறகு கொடுங்கையூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.

“கட்சி ரீதியான நடவடிக்கையே”:
இதனிடையே, இந்த நடவடிக்கை குறித்து குஷ்புவிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த குஷ்பு, “திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீக்கி இருப்பது சந்தோஷம். ஆனால், இதுபோல் பலர் அக்கட்சியில் இருக்கிறார்கள். இப்போது அவர் மீது எடுக்கப்பட்டிருப்பது கட்சி ரீதியான நடவடிக்கை. பெண் என்ற முறையில் என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்வேன்.

முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை:
கட்சியில் இருந்து அவரை நீக்கியதற்காக எல்லாம் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, என்ன தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டுமோ அதை நான் செய்வேன். என்னை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். அவரை முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.