சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகி குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர் கொடுங்கையூர் போலீஸார். தொடர்ந்து அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக, திமுக தலைமைக் கழகப் பேச்சாளராக செயல்பட்டு வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் டிஸ்மிஸ் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகி குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதோடு அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு காரணமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.