சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படம் எவ்வளவு பெரிய ப்ளாக் பஸ்டர் ஆகும் என்று தெரியாது என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்திருக்கிறார்.
வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். வாரிசு கொடுத்த சூட்டை இதில் தணித்துக்கொள்ள அவர் முனைந்திருப்பதாலும், மாஸ்டர், விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்குவதாலும் லியோ நிச்சயம் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து செதுக்கிவருவதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
ஆல்டர் ஈகோ: லியோ படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து அந்தப் படத்தின் கதை என்ன, அது எல்சியூ எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருமா போன்ற எக்கச்சக்க கேள்விகளை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். ஆனால் அதுகுறித்து எந்தவிதமான தகவலையும் கசியவிடாமல் படக்குழு பாதுகாத்துவருகிறது. இந்தச் சூழலில் முதல் சிங்கிளுக்கான அறிவிப்பு போஸ்டரில் ஆல்டர் ஈகோ என்ற வார்த்தை கவனம் ஈர்த்துள்ளது.
கதை என்ன: ஏற்கனவே லியோ படத்தின் கதை குறித்து ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதாவது ஒரு சம்பவத்தை செய்துவிட்டு வேறு ஒரு நபராக காஷ்மீரில் விஜய் வாழ்வார். அவரது இருப்பிடத்தை தெரிந்துகொண்டு எதிரிகள் அங்கு வருவார்கள் என கூறப்பட்டது. இப்போது ஆல்டர் ஈகோ என்ற வார்த்தை அதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறதென்று கூறுகிறார்கள் ரசிகர்கள். ஏனெனில் ஆல்டர் ஈகோ என்றால் ஒரு விஷயத்தை செய்துவிட்டு தன்னுடைய அடையாளங்களை மறைத்து இன்னொருவராக வாழ்வது என்று அர்த்தம்.
தந்தையா சஞ்சய் தத்: இதற்கிடையே திரைப்படத்தில் சஞ்சய் தத்தான் விஜய்க்கு தந்தை, அர்ஜுன் விஜய்க்கு சகோதரர். இதில் மூன்று பேருமே கேங்ஸ்டர்தான் என கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி என்ற பாடல் வெளியாகவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனிருத்: இந்நிலையில் படத்துக்கு இசையமைத்திருக்கும் அனிருத் லியோ குறித்து பேசியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. அதன்படி, லியோ ப்ளடி ஸ்வீட் படத்தின் காஷ்மீர் காட்சிகளை பார்த்த அவர், ‘இந்தப் படம் எந்த லெவலுக்கு போகும்னு தெரியாது. அந்த மாதிரி இருக்கும். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு எவ்வளவு பெரிய ப்ளாக் பஸ்டர் ஆகும் என்று யோசிக்கலாம். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது’ என படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
நட்சத்திர பட்டாளம்: லியோ படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன் தவிர்த்து த்ரிஷா, ப்ரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் பாடல் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்த சூழலில் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.