Saudi minister who went to Iran after 7 years | 7 ஆண்டுகளுக்கு பின் ஈரான் சென்ற சவுதி அமைச்சர்

டெஹ்ரான்,-ஈரான் – சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நட்புறவு ஏற்பட்ட நிலையில், சவுதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் நேற்று ஈரான் சென்றார்.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல் நிமர் உட்பட, 47 பேருக்கு, 2016ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த சம்பவம் பல்வேறு நாடுகளில் வாழும் ஷியா பிரிவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஷியா பிரிவினர் அதிகம் வாழும் மேற்காசிய நாடான ஈரானிலும் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, ஈரான் உடனான உறவை முறித்துக் கொள்வதாக சவுதி அரேபியா அறிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் நட்புறவு ஏற்பட உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன.

இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்து, இருநாட்டு பிரதிநிதிகளுடனும் சீனா தொடர்ந்து ஆலோசனை நடத்தியதன் பலனாக, கடந்த மார்ச்சில் சவுதியும், ஈரானும் சமாதானம் அடைந்தன.

இருநாட்டு உறவு களும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து, ஈரான் மற்றும் சவுதி அரேபியாவின் ராஜாங்கப் பணிகள் துாதரகங்கள் வாயிலாக சமீபத்தில் துவங்கின.

இதன் அடுத்தகட்டமாக, ஈரான் சென்றுள்ள சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான், சவுதி அரேபியாவுக்கான துாதரகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க உள்ளார்.

அவரை, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிராப் தொல்லாஹியன் வரவேற்றார். இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர்.

இது குறித்து ஈரான் அமைச்சர் அமிராப் கூறுகையில், “சூடானில் போர் தொடர்வது குறித்து நாங்கள் எங்கள் கவலையை தெரிவித்தோம்.

”மேலும் சில பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தோம்,” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.