"முதல்வர் ஐயா, வீர வசனம் பேசாதீங்க.. பார்க்க சகிக்கல".. அண்ணாமலை உச்சக்கட்ட கிண்டல்

சென்னை:
பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் பேசியதை கிண்டல் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளது திமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், திமுகவை சீண்டி பார்க்க வேண்டாம் என்றும், நாங்க திருப்பி அடிச்சா தாங்க மாட்டீர்கள் எனவும் ஸ்டாலின் பேசியிருந்தார். பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அந்த வீடியோவில் ஸ்டாலின் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, ஆங்காங்கே பாஜகவினர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு அண்ணாமலை உரையாற்றினார். அவர் பேசியதாவது:

இத்தோடு நிறுத்திக்கோங்க:
முதலைமைச்சர் அவர்களுக்கு நான் ஒரே ஒரு வேண்டுகோளை வைக்கிறன். நீங்க நல்லது பண்ணலைனா கூட பரவாயில்லை. பிரதமர் மோடி பண்ற நல்லதை தடுக்காதீங்க. தமிழகத்துக்கு பிரதமர் நிறைய கொடுக்கணும்னு நினைக்கிறார். தயவுசெய்து அவரை கொடுக்க விடுங்க. பிரதமரிடம்தான் இப்படி என்றால், ஆளுநரிடம் வேறு விதமாக வம்பு பண்ணிக் கொடுக்கிறார்கள் திமுகவினர். ஏதோ குழாயடி சண்டை போடுவதை போல ஆளுநரை வம்புக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதல்வர் ஐயா, தயவுசெய்து இதையெல்லாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வீர வசனம்.. பார்க்க சகிக்கல:
முதல்வர் ஐயாவுக்கு இன்னொரு வேண்டுகோள். தயவுசெய்து வீரவசனம் பேசாதீங்க. நீங்க வீரமாக பேசுறத பார்க்க சகிக்கல. எங்களால் முடியல. இதையெல்லாம் விட்டுவிட்டு நல்ல ஆட்சியை கொடுங்க. அப்படி செய்தால் பாஜகவோட முழு ஆதரவும் திமுகவுக்கு உண்டு. இந்த பில்ட் அப் கொடுக்குறனு சொல்லிட்டு, பாஜக காரங்க வீட்டுக்கு ராத்திரி 1 மணிக்கு வர வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க. ஏதாவது வேணும்னா சொல்லி அனுப்புங்க. நாங்களே வர்றோம். போலீஸை பார்த்ததும் கறை வேட்டியை கழட்டிட்டு ஓடுறவங்க நாங்க கிடையாது.

பாஜக தொண்டர்கள் ஜாக்கிரதை:
அதே சமயத்தில், பாஜக தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த 9 மாதங்கள் நமக்கு கொஞ்சம் கடினமாகதான் இருக்கும். தயார் ஆகிக்கோங்க. முழு அதிகாரத்தை நம் மீது காட்ட

அரசு முடிவு செய்திருக்கிறது. இதுவும் ஒருவகையில் நல்லதுதான். திமுக நம்மை எதிரியாக ஏத்துக்கிட்டாங்க. வாங்க.. மோதி பார்க்கலாம். பலப்பரீட்சை வைக்கலாம். நீங்களா நாங்களானு 2024 தேர்தல் களத்துல பார்க்கலாம். பாஜக தொண்டன் எதற்கும் தயாராக இருக்கிறான்.

பாஜக காரன் சிங்கக்குட்டி:
ஒவ்வொரு பாஜக காரனும் சிங்கக்குட்டியாக களத்தில் இருக்காங்க. எந்த கொம்பனாலும் பாஜகவை ஆட்ட முடியாது. ஒருகாலத்தில் அதாவது 1984-இல் வெறும் 2 எம்.பி.க்கள் மட்டும்தான் பாஜகவில் இருந்தாங்க. காங்கிரஸ் எங்களை ரொம்ப ஏளனமாக பார்த்தாங்க. கிண்டலா பேசினாங்க. அவங்களுக்கு 450 எம்.பி.க்கள் இருந்தாங்க. ஆனால் வெறும் 30 ஆண்டுகளில் 303 எம்.பி.யாக நாங்க மாறி இருக்கிறோம். பாஜக காரனோட உழைப்பை சாதாரணமாக நினைச்சுக்காதீங்க. இப்போ தமிழகத்தில் 4 பேர் (எம்எல்ஏ) இருக்கோம். விரைவில் 150 ஆக மாறுவோம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.