மதுரை: மதுரை தானம் அறக்கட்டளை, மதுரை கிரீன் மற்றும் ஹெச்சிஎல் பவுண்டேசன் சார்பில் 108-வது மரங்கள் அறியும் பயணம் ஞாயிறு அன்று நத்தம் சாலையிலுள்ள கேத்தாம்பட்டி சங்கிலி கருப்பு கோயில் காட்டின் பசுமை வளாகத்தில் நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சிதம்பரம் தலைமையில் பயணம் நடைபெற்றது.
இதில், அமெரிக்கன் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் ஸ்டீபன், கோயில் காடுகளிலுள்ள மரங்கள், செடிகள் குறித்து விளக்கி கூறினார். அப்போது அவர் கூறியதாவது.
அழிஞ்சில் மர இலைகள் விஷக்கடிகளுக்கு முறிவு மருந்தாகும். மேலும் இதன் மரப்பட்டைகள் பல்வலியை தீர்க்க பயன்படுத்தியுள்ளனர். உசிலை மரங்களின் இலைகளை ‘ஷாம்பூ’ போல் தலைக்கு பயன்படுத்தலாம், இது இயற்கை தந்த ‘ஷாம்பூ’. அதேபோல், கண்ணாடி கள்ளிகள் வாத நோய்கள் போக்கும் மருந்தாகும். பற்படாகம், விஷ்ணுகரந்தை இலைகளை காய்ச்சல் குணமாக்க பயன்படுத்தியுள்ளனர், என்றார்.
மேலும், வெப்பாலை, புரசு, காயா, காட்டு கருவேப்பிலை, பெருமரம், பாவட்டை, குருவி வெற்றிலை, ஆதலை, திரணி, முயல்காது, ஆதலை, தீக்குச்சி மரம், விராலி, மண் அரிப்பை தடுப்பை தடுக்கும் ரயில் கத்தாளை ஆகிய 40-க்கும் மேற்பட்ட மர வகைகள் கண்டறிந்தனர்.
இப்பயணத்தில், கால்நடை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, அருளானந்தர் கல்லூரி முன்னாள் பேராசிரியர் பெர்னாட்ஷா, டாக்டர் புஷ்பா, வழக்கறிஞர் மணி, பாத்திமா நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் விக்டோரியா, நிர்மலா பள்ளி ஆசிரியை ரஞ்சிதம் மற்றும் கல்லூரி மாணவர்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர்.